மஹிந்த, கோட்டா, பசிலின் குடியுரிமை பறிபோகும் அபாயம்?
17 கார்த்திகை 2023 வெள்ளி 16:05 | பார்வைகள் : 3229
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
‘‘நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாக மஹிந்த, பசில், கோட்டா, ஆட்டிகல, கப்ரால் உட்பட 7 பேரின் பெயர்களை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர்களால்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆகவே, இந்த விடயம் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. இவர்களது குடியுரிமையை பறிக்க முடியும்.‘‘ என்றார்.
இதேவேளை, இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களது குடி உரிமைகள் பறிப்பதற்கு விசேட பிரேரணையொன்றை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதியின் பிரதம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த 14ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், இந்த தீர்ப்பை அளித்தது.
அதில் குறித்த மூவருக்கும் மேலதிகமாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டப்ளியூ.டி. லக்ஷ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர மத்திய வங்கியின் நிதிச் சபை ஆகியனவும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப் பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.