Paristamil Navigation Paristamil advert login

விண்ணைத் தாண்டி வருவாயா' இரண்டாம் பாகம் தயாராகிறதா?

விண்ணைத் தாண்டி வருவாயா' இரண்டாம் பாகம் தயாராகிறதா?

19 கார்த்திகை 2023 ஞாயிறு 14:05 | பார்வைகள் : 5915


தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த எத்தனையோ காதல் படங்களில் இன்றைய இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்த, இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு காதல் படமாக இருப்பது 'விண்ணைத் தாண்டி வருவாயா'.

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா, மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த படம் அது. தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிக்க அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது இயக்குனர் கவுதம் மேனன், சிலம்பரசன் ஆகியோரிடம் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

கவுதம் மேனன், சிம்பு கூட்டணி 'விண்ணைத் தாண்டி வருயா' படத்திற்குப் பிறகு “அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களில் மீண்டும் இணைந்தது. ஆனால், அவையிரண்டும் ஆக்ஷன் படங்களாகவே இருந்தன.

கொரோனா முதல் அலை தாக்கத்தின் போது கவுதம் மேனன், சிம்பு, த்ரிஷா மூவரும் 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் ஒன்றை வெளியிட்டனர். அதன்பின் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கடுத்து 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற தலைப்புடன் கவுதம் மேனன் - சிம்பு இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படம்தான் 'வெந்து தணிந்தது காடு' படமாக வேறு கதையில் மாறியது.

சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவரிடம் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, “நான் ரெடி சார், இதை சிம்பு கிட்ட சொல்லி கேளுங்க,” என்றார். கவுதம் ரெடி என்று சொல்லிவிட்டார், சிம்புவும் ரெடி என்று சொன்னால் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' வர வாய்ப்புள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்