Paristamil Navigation Paristamil advert login

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு - 2 ஆவது நாளாகவும் தொடரும் பணி

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு - 2 ஆவது நாளாகவும் தொடரும் பணி

21 கார்த்திகை 2023 செவ்வாய் 10:21 | பார்வைகள் : 2818


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்று  இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த பொலித்தீன் உறைகள் , உடல் எச்சங்களுக்கு மேற்பகுதியில் காணப்பட்ட மண்கள் அகற்றும் பணியானது நேற்று உத்தியோக பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றையதினம் காலை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று அகழ்வாய்வு ஆரம்பித்த இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.கே.நிறஞ்சன், பற்பரன், கு.ஆன்சுமங்கலா மற்றும் கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, விஷேட அதிரடி படையினர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் பிரசன்னமாகியிருந்தனர்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்