உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் பற்றித் தெரியுமா
21 கார்த்திகை 2023 செவ்வாய் 16:02 | பார்வைகள் : 2511
உலகில் உள்ள எல்லாருமே ஏதோவொரு சமயத்தில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவார்கள். ஆனால் உடல் எடையை குறைப்பது அவ்வுளவு எளிதான வேலை அல்ல. பலரும் பல டயட்கள், உடற்பயிற்சிகள் என பலவற்றை முயற்சிப்பார்கள். உடல் எடை குறைப்பில் நம்முடைய மெடபாலிசம் முக்கிய பங்காற்றுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. உண்மையில் மெடபாலிசம் என்றால் என்ன? நமது உடல் எடையை குறைக்க இது எவ்வாறு உதவுகிறது? அதோடு சேர்த்து நம்முடைய மெடபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவும் 5 சக்திவாய்ந்த உணவுகள் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
மெட்டபாலிசம் என்றால் என்ன? எவ்வறு இது உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது? மெட்டபாலிசத்தை நமது உடலின் சூப்பர் ஹீரோ என்று சொல்லலாம். உடலில் எல்லாம் சரியான அளவில் நடைபெற இது அயராது உழைக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றும் நடைமுறையே மெடபாலிசம். இந்த ஆற்றலே நம் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும், அதாவது சுவாசிப்பது முதல் கண் சிமிட்டுவது வரை அனைத்திற்கும் எரிபொருளாக இருக்கிறது. நம் உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. உங்கள் மெடபாலிசத்தை அதிகப்படுத்தினால், கலோரிகள் எரிக்கப்படுவதும் அதிகமாகும்.
மிளகாய் : மிளகாய் உங்கள் உணவுக்கு காரத்தை தருவதோடு மெட்டபாலிசத்தையும் அதிகப்படுத்துகிறது. இதிலிருக்கும் கேப்சைசின் என்ற கலவை உடலை சூடாக்கி, அதிகமான கலோரிகள் எரிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகையால் அடுத்த முறை உணவு சமைக்கும் போது, கொஞ்சம் கூடுதலாக மிளகாயை சேர்த்து, உங்கள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துங்கள்.
கிரீன் டீ : நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ அல்லது காஃபிக்குப் பதிலாக ஆன்டி ஆக்சிடென்ட் நிரம்பிய கிரீன் டீயை குடியுங்கள். இது உங்கள் மனதிற்கு இதமளிப்பதோடு இதிலுள்ள கேடேசின்ஸ் உங்கள் மெட்டபாலிஸத்தை அதிகப்படுத்தும். மேலும் க்ரீன் டீ குடிப்பதால் உங்கள் கவனமும் ஆற்றலும் மேம்படும்.
லீன் இறைச்சி மற்றும் ப்ரொட்டீன் : நமது மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துவதில் புரோட்டீன் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இது பலருக்கும் தெரியாது. சிக்கன், மீன், வான்கோழி போன்ற லீன் இறைச்சிகள் சுவையாக இருப்பதோடு உங்கள் மெட்டபாலிஸத்தையும் அதிகரிக்கிறது. சைவ உணவுப் பிரியர்களுக்கு தாவர அடிப்படையிலான பல உணவுகள் உள்ளன. உதாரணமாக பருப்புகள், சுண்டல், டோஃபு, யோகர்ட், குயினோவா போன்ற பல புரோட்டீன் உணவுகள் கிடைக்கின்றன.
சிட்ரஸ் பழங்கள் : உங்கள் வீட்டில் எலுமிச்சை இருந்தால், அதை உங்கள் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சியை தருவதோடு இதில் அதிகளவு வைட்டமின் சி நிரம்பியுள்ளது. உடற்பயிற்சியின் போது நம் உடலில் உள்ள கொழுப்புகள் குறைவதற்கு இந்த வைட்டமின் தான் காரணமாக இருக்கிறது. ஆகையால் உங்கள் உடல் எடை குறைப்பிற்கு சிட்ரஸ் பழங்கள் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
ஓட்ஸ் : உங்கள் உடல் எடை குறைப்பில் ஓட்ஸின் பங்கை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஓட்ஸில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இதை சாப்பிடும் போது அதிக நேரம் பசியெடுக்காததோடு உங்கள் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தினமும் காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டால் அன்றைய நாளின் மெட்டபாலிசத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.-