இத்தாலியில் படகு நீரில் மூழ்கி விபத்து - 2 வயது குழந்தை பலி

23 கார்த்திகை 2023 வியாழன் 10:29 | பார்வைகள் : 6414
இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் பயணித்த 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து 50இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் புறப்பட்ட படகு லம்பேடுசா தீவில் திடீரென கவிழ்ந்தது.
இதன்போது கப்பலில் இருந்த சிலர் நீந்தி கரைக்குச் சென்றுள்ளதுடன் மற்றவர்கள் கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.
42 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படகில் புர்கினா பாசோ, கினியா-பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பயணித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடலோர காவல் படையினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலியின் தெற்கே உள்ள லம்பேடுசா தீவிற்கு புலம்பெயர்ந்தோர் பெருமளவில் வருகை தரும் இடமாக காணப்படுகின்றது.