சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மீண்டும் பின்னடைவு
24 கார்த்திகை 2023 வெள்ளி 08:39 | பார்வைகள் : 2889
உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியின் போது இடையில் இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால், நேற்று முன்தினம் இரவு தடைபட்ட பணிகள், நேற்று காலை மீண்டும் வேகம் எடுத்தன.
ஆனால் எதிர்பாராத விதமாக, இடிபாடுகளை குடையும் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, மீட்புப் பணிகள் நேற்றிரவு தற்காலிகமாக மீண்டும் நிறுத்தப்பட்டன.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உத்தரகாசி - யமுனோத்ரியை இணைக்கும் விதமாக, நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சில்க்யாரா - தண்டல்காவ்ன் இடையே உள்ள மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த, 12ம் தேதி இடிந்து விழுந்தது. மறுமுனையில் பணியில் ஈடுபட்டிருந்த, 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி 12 நாட்களாக தொடர்ந்து வருகிறது.
இடிபாடுகளுக்குள் 3 அடி விட்டம் உடைய இரும்புக் குழாயை நுழைத்து, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், துளையிடும் போது அதிக அதிர்வு ஏற்பட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டன.
தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் மற்றொரு சிறிய குழாய் வழியே அனுப்பப்பட்டன. தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பது, 'எண்டோஸ்கோப்பி' கேமரா வாயிலாக உறுதி செய்யப்பட்டது.
நுழைவுப் பகுதியில் இருந்து 187 அடிக்கு சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதில், நேற்று முன் தினம் மாலை நிலவரப்படி 148 அடி வரை இரும்புக் குழாய்கள் செலுத்தப்பட்டன. சில மணி நேரங்களில் பணிகள் முடிந்து, தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என கூறப்பட்டது.
ஆனால், எதிர்பாராத விதமாக குறுக்கே இரும்பு கம்பிகள் இருந்ததால், இடிபாடுகளை குடையும் பணி நேற்று முன்தினம் நள்ளிரவு தடைபட்டது. அந்த இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டு நேற்று காலை மீண்டும் பணிகள் துவங்கின. நேற்று மதிய நிலவரப்படி, 148 அடியில் நிறுத்தப்பட்ட பணி, 154 அடியை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீதியுள்ள 33 அடிகளுக்கு மட்டுமே இரும்பு குழாய்களை செலுத்த வேண்டும் என்பதால், நள்ளிரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத விதமாக, இடிபாடுகளை துளையிடும் 25 டன் எடை உடைய இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நேற்றிரவு திடீர் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனாலும் விரைவில் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 12 நாட்களாக சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் இன்று மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நேற்று சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். பிரதமர் மோடியிடம், மீட்பு பணிகள் குறித்து அவ்வப்போது போன் வாயிலாக தகவல் தெரிவித்தார்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தன் உறவினரை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருந்த பெண்.
மீட்பது எப்படி?
தேசிய பேரிடர் மீட்புப்படையின் இயக்குனர் ஜெனரல் அதுல் கர்வால் நேற்று கூறியதாவது:இடிபாடுகளுக்குள் நுழைக்கப்பட்டு வரும் இரும்புக் குழாய்கள், தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை அடைந்ததும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் அந்த குழாயின் வழியில் கற்கள் உள்ளிட்ட தடைகள் இருக்கிறதா என்பதை முதலில் சோதனை செய்வர்.
அப்படி இருந்தால் அவை அகற்றப்படும். அதன் பின், சக்கரங்கள் பொருத்தப்பட்ட, 'ஸ்டெச்சர்'கள் உள்ளே அனுப்பப்பட்டு, அதில் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக படுக்க வைக்கப்பட்டு கயிறு வாயிலாக வெளியே இழுத்து வரப்படுவர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக, 41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.