Paristamil Navigation Paristamil advert login

மசோதாக்களை கவர்னர்கள் நிறுத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

மசோதாக்களை கவர்னர்கள் நிறுத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

25 கார்த்திகை 2023 சனி 06:54 | பார்வைகள் : 1492


எந்த ஒரு காரணமும் கூறாமல், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், எந்த ஒரு மசோதாவையும், கவர்னர்கள் நீண்ட காலம் நிறுத்தி வைக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.<br><br>பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 

மோதல்

மாநில அரசுக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. 

இந்நிலையில், நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து, பஞ்சாப் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள், ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது. 

கடந்த 10ம் தேதி, இந்த வழக்கில் தன் தீர்ப்பை அமர்வு பிறப்பித்தது. இது, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று பதிவிடப்பட்டு உள்ளது. 

தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் உள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர்களுக்கு என, சில அரசியல் சாசன கடமைகள் உள்ளன. 

அதே நேரத்தில் இந்த கடமைகள், அதிகாரங்கள், சட்டசபையின் நடவடிக்கைகளை முறியடிப்பதாக இருக்கக் கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு, சட்டசபைக்கு உள்ள அதிகாரத்தை, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிக்க கவர்னர்கள் முயற்சிக்கக் கூடாது.

கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகம் ஒன்றை ஒன்று சார்ந்ததாக இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று தடம்புரண்டாலும், மக்கள் பாதிக்கப்படுவர்.

கவர்னர்களுக்கான கட்டுப்பாடு இல்லாத அதிகாரம் என்பது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி முறைக்கு எதிரானதாகவே இருக்கும்.

அதிகாரம்

அரசியல் சாசனத்தின், 200வது பிரிவின்படி, ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பதற்கு கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. 

அதே நேரத்தில் அந்த மசோதாவை, எந்தக் காரணமும் கூறாமல், எடுத்த நடவடிக்கையும் எடுக்காமல், நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைக்க முடியாது.

இதே சட்டப் பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, நிறுத்தி வைப்பதாக முடிவு எடுத்துவிட்டால், அதை உடனடியாக சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

கடந்த ஜூன் 19 மற்றும் 20ம் தேதி மற்றும் அக்., 20ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத் தொடர், சட்டப்பூர்வமானதா என்று கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபையின் தலைவரான சபாநாயகர் முடிவு எடுத்து, இந்தக் கூட்டம் நடந்துள்ளதால், அது சட்டப்பூர்வமானதே.

அதனால், இது தொடர்பான கேள்வியை எழுப்பி, மசோதாக்களை நிறுத்தி வைக்கக் கூடாது.

தன்னிடம் உள்ள மசோதாக்கள் மீது, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தனக்குள்ள அதிகார வரம்பை பயன்படுத்தி அவர், இவற்றின் மீது உரிய முடிவுகளை எடுக்கலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்