லாக்கர் - விமர்சனம்
25 கார்த்திகை 2023 சனி 16:05 | பார்வைகள் : 3114
கொள்ளை அடிக்கும் கதாநாயகன், அவனது நண்பர்கள் என தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு சில பல படங்கள் வந்துவிட்டன. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இது. அப்படியான படங்களில் 'சதுரங்க வேட்டை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படங்களின் கதைகளை கலந்து போட்டு குலுக்கி இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்கள். ராஜசேகர், யுவராஜ் கண்ணன்
விக்னேஷ் சிவன் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விதவிதமான கொள்ளைகள் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். திடீர் என சந்திக்கும் நாயகி நிரஞ்சனியைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். தன்னைப் பற்றிய உண்மைகளை நிரஞ்சனியிடம் இருந்து மறைத்து காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் விக்னேஷ் பற்றிய உண்மைகள் நிரஞ்சனிக்குத் தெரிய வருகிறது. அதன்பின் நிரஞ்சனி அவரைப் பற்றிய பிளாஷ்பேக் ஒன்றைச் சொல்லி, வில்லனான நிவாஸ் ஆதித்தனிடம் இருக்கும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கொள்ளை அடித்த பின்பு வில்லனிடம் விக்னேஷ் மாட்டிக் கொள்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் உள்ள பல காட்சிகளை இதற்கு முன்பே மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களில் பார்த்தவையாக இருப்பதால் படம் பார்க்கும் போது நமக்கு பரபரப்பை ஏற்படுத்தவில்லை. அதைத் தவிர்த்துப் பார்த்தால் படம் கொஞ்சம் சுவாரசியமாகவே நகர்கிறது. அதற்குக் காரணம் படத்தில் நடித்துள்ளவர்கள்.
நாயகன் விக்னேஷ் சண்முகம், நாயகி நிரஞ்சனி இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். வில்லன் நிவாஸ் ஆதித்தனுக்கு அவ்வளவு முக்கியத்துவமில்லை. நாயகனின் நண்பர்களே அதிகக் காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.
கிளைமாக்சில் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார்கள். அதுதான் படத்தில் உள்ள புதிய சுவாரசியம். படத்தில் அபத்தமான பல காட்சிகளும் உள்ளன. புதிய கதையாக யோசிக்கவில்லை என்றாலும் புதிய காட்சிகளையாவது யோசித்து வைத்து பரபரப்பைக் கூட்டியிருக்கலாம்.