பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு எதிராக - மக்ரோன் கருத்து!
25 கார்த்திகை 2023 சனி 18:27 | பார்வைகள் : 3669
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைக்கு எதிராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார். “இந்த மிருகத்தனம் அற்ற சமூகத்தை கட்டி எழுப்புவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மக்ரோன் தனது X சமூகவலைத்தளமூடாக (முன்னாள் Twitter) இன்று காலை சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டார். அதிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டார். ”“ஒவ்வொரு நாளும் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிர்கள் அழிக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாதது அல்ல, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்” என தெரிவித்த மக்ரோன், “இந்த மிருகத்தனமற்ற சமூகத்தை நாம் உருவாக்க முடியும்!” எனவும் தெரிவித்தார்.
சென்ற ஆண்டில் பிரான்சில் 244,000 பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர். 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்காகும். அதேவேளை, 118 பெண்கள் சென்ற ஆண்டில் குடும்ப வன்முறையினால் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று நவம்பர் 25 ஆம் திகதி “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்” கடைப்பிடிக்கப்படுவதால், இந்த நாளில் ஜனாதிபதி மக்ரோன் இதனைத் தெரிவித்துள்ளார்.