காங்., தலைவர் அழகிரிக்கு சொந்த கட்சியினரே... எதிர்ப்பு :
26 கார்த்திகை 2023 ஞாயிறு 06:34 | பார்வைகள் : 1910
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் நேற்று நடந்த பூத் கமிட்டி பயிற்சி கூட்டத்திற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு, அவரது சொந்த கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மகளிரணியினர் கருப்பு சேலை அணிந்து, கையில் கருப்புக் கொடிகள் ஏந்தி, அழகிரிக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக காங்., தலைவர் அழகிரிக்கு, தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டாரத்தில் காங்., - எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் நியமித்த வட்டார தலைவர்களை, அழகிரி நீக்கினார்.
தாக்கினர்
இதுகுறித்து விளக்கம் கேட்கச் சென்ற ரூபி மனோகரன் ஆதரவாளர்களை, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அழகிரி ஆதரவாளர்கள் தாக்கினர். இதில், காங்., பிரமுகர்கள் ஜோஸ்வா, குளோரி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். எனவே, 'கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய அழகிரியை, திருநெல்வேலி மாவட்டத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்' என, அவரது சொந்த கட்சியினர் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று லோக்சபா தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி பயிற்சி பாசறை கூட்டம், திசையன்விளையில் நடந்தது. இதில், அழகிரி, எம்.பி.,க்கள் மாணிக்தாகூர், ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு, நாங்குநேரி எம்.எல்.ஏ.,வும், மாநில பொருளாளருமான ரூபி மனோகரனுக்கு முறையான அழைப்பு இல்லை எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில், ரூபி மனோகரனும் பங்கேற்கவில்லை.<br>அதே நேரத்தில், திருநெல்வேலி வந்த அழகிரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று காலை, மாநில காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலர் கமலா, இணை பொதுச்செயலர் குளோரி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலை அணிந்து, கருப்புக் கொடிகள் ஏந்தி, வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட காங்., அலுவலகத்தை
முற்றுகையிட்டனர்.
மிரட்டல்
இதை அறிந்த அழகிரி, திருநெல்வேலிக்கே வரவில்லை. அங்குள்ள ஹோட்டலில் தங்கினால், தனக்கு எதிராக போராட்டம் நடக்கும் என்பதால், நேராக திருக்குறுங்குடி சென்று, அங்குள்ள தனியார் பங்களாவில் தங்கினார்.இந்நிலையில், 'அழகிரி திருநெல்வேலி வந்தால், அவர் மீது வெடிகுண்டு வீசுவோம்' என, மிரட்டல் விடுத்த நாங்குநேரி வடக்கு வட்டார துணைத் தலைவர் அன்புரோஸ், 40, என்பவர் கைது செய்யப்பட்டார். முத்துராஜ் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு சொந்த கட்சியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.