பெண்களிடம் புள்ளி விபரம் சேகரிப்பு: அரசுக்கு பழனிசாமி கண்டனம்

26 கார்த்திகை 2023 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 4375
நகர பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்களிடம், தேவையில்லாத விபரங்களை அரசு சேகரிப்பதற்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பெண்களுக்கு நகர பஸ்களில், கட்டணமில்லா சேவை வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. அதன்பின் பெரும்பாலான சாதாரண பஸ்களை, விரைவு நகர பஸ்கள், சொகுசு பஸ்கள் என மாற்றிவிட்டு, சாதாரண பஸ்களின் ஓட்டத்தை குறைத்து விட்டது.
அலுவலக நேரத்தில், 'பிங்க்' நிற பஸ்கள் அதிகப்படியாக இயக்காததால், பெண்கள் மற்ற பஸ்களில், கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலைமை உள்ளது. பிங்க் நிற பஸ்களில் பயணம் செய்யும் பெண்களை, 'ஓசி டிக்கெட்' என அவமரியாதையாக, கண்டக்டர் முதல், அமைச்சர் வரை அழைத்த நிகழ்வுகள் என, தி.மு.க., அரசு மீது, பெண்கள் வைத்த குட்டுகள் அதிகம்.
இந்நிலையில், இப்பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம், 15 வகையான விபரங்களை சேகரிப்பதாகவும், பெண்களிடம் ஏன் இப்பஸ்களில் பயணம் செய்ய வேண்டும் என்று கேள்வியை எழுப்பி உள்ளதாகவும், இது சம்பந்தமாக கண்டக்டருக்கும், பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களிடம், அவர்கள் பெயர், வயது, மொபைல் எண் கேட்பது, அவர்களின் தனி உரிமையில் தலையிடுவதாகும். மொபைல் எண் வாங்கும் போது, அருகில் உள்ளவர்களும், அவர்களின் மொபைல் எண்ணை குறிப்பெடுக்க வாய்ப்புள்ளது.
இதன் வழியே ஒரு சில கண்டக்டர்கள், மொபைல் எண் குறிப்பெடுத்த போது, அருகில் இருந்தவர்கள், அப்பெண்களிடம் பேச முயற்சிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் விட, பெண்களிடம் நீங்கள் என்ன ஜாதி என, கண்டக்டர்கள் கேட்பது, மிகுந்த கண்டனத்துக்கு உரியது.
உடனடியாக இதுபோன்ற புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணிக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.