சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல்: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு
26 கார்த்திகை 2023 ஞாயிறு 11:50 | பார்வைகள் : 1994
சீனாவில் குழந்தைகளுக்கு வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் மற்றும் சுவாச நோயை, தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவில் மர்ம காய்ச்சல் 'எச்9என்2' என்ற வைரஸ் தொற்று, குழந்தைகள் இடையே வேகமாக பரவி வருகிறது.
நிமோனியா வகை காய்ச்சல் போல் உள்ள இவ்வகை காய்ச்சலால், சுவாசப் பிரச்னைகள் அதிகளவு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, இதுதொடர்பான விரிவான விபரங்களை அளிக்கும்படி, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.
எனினும், கொரோனா தொற்றின்போது ஊரடங்கு உத்தரவால், குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததன் விளைவாக, தற்போது இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறுகையில், ''சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல் மற்றும் சுவாச நோயின் தீவிரத்தை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனரகம் ஆகியவை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.
புதுடில்லி ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அஜய் சுக்லா கூறுகையில், ''இவ்வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என தகவல் வெளியாகி உள்ளதால், நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
கொரோனா தொற்றின்போது நாம் கடைப்பிடித்த துாய்மை நடவடிக்கைகளை, தொடர்ந்து பின்பற்ற வேண்டும்,'' என்றார்