சனாதன தர்ம எதிர்ப்புக்கு பதிலடி: உலக ஹிந்து மாநாட்டில் தீர்மானம்
27 கார்த்திகை 2023 திங்கள் 08:28 | பார்வைகள் : 2177
உலகம் முழுதும் உள்ள ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்பது உட்பட முக்கிய தீர்மானங்கள் உலக ஹிந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
நிறைவு
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், 'உலக ஹிந்து காங்கிரஸ் 2023' மாநாடு கடந்த 24ம் தேதி துவங்கிய நிலையில், நேற்று நிறைவு பெற்றது.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் துவக்கி வைத்த இந்த மாநாட்டில், 61 நாடுகளைச் சேர்ந்த 2,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, வி.எச்.பி., பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே உட்பட பலர் பங்கேற்றனர். இறுதி நாளான நேற்று மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எதிரான கருத்து
இதில், உலகம் முழுதும் உள்ள ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும் எனவும், சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகளுக்கு உரிய பதிலடி தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் உலக ஹிந்து மாநாட்டின் நிறுவனர் சுவாமி விஞ்ஞானானந்தா பேசியதாவது: கொரோனா காலக்கட்டத்தின் போது ஹிந்துக்களை ஒருங்கிணைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இச்செயல்பாடு புத்துயிர் பெற்றுள்ளது.
கிறிஸ்துவ அமைப்புகளின் பிடியில் உள்ள ஹிந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.