அதிகமாக உப்பு சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..?
27 கார்த்திகை 2023 திங்கள் 13:55 | பார்வைகள் : 2856
வயிற்றுப் புற்றுநோய் தற்போது பெரும்பாலானோருக்கு சந்தித்து வரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. மருத்துவ ரீதியாக இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படும் இந்த புற்றுநோயானது வயிற்றின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் உருவாகலாம். திடீர் எடை இழப்பு, பசியின்மை, இரத்த சோகை, வீக்கம் மற்றும் வயிற்று வலி ஆகியவை வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளாகும். இந்தியாவில், ஆண்டுதோறும் 75,000 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள் என இங்கு தெரிந்து கொள்வோம்.
உப்பு : உணவில் அதிகளவில் உப்பு சேர்ப்பது வயிற்று புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகும். உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது வயிற்று புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது. எனவே கருவாடு போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
உடல் பருமன் : குருகிராம், Oncquest Laboratories Limited, Molecular Biology National Reference Lab இன் தலைவர் டாக்டர். வினய் பாட்டியா இதுகுறித்து கூறுகையில், அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனை வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாகும். உடல் பருமனுக்கும், வயிற்றுப் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
புகைப்பிடித்தல் : புகைப்பிடிப்பதால் நுரையீரலில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமின்றி, வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. புகையிலை பொருட்களில் உள்ள கார்சினோஜென்கள் புற்றுநோய் கட்டிகள் உருவாக காரணமாக உள்ளன.
மது அருந்துதல் : அதிகப்படியான மது அருந்துதல் வயிற்று புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணமாகும். மதுவை அதிகமாக உட்கொள்வது வயிற்றில் வீக்கம் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தி, புற்றுநோய் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எனவே மது அருந்துவதை அறவே தவிர்த்து விடுங்கள்.
இரத்த சோகை : இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இரத்த சோகை ஏற்பட்டால் வயிற்றில் வீரியம் மிக்க செல்கள் வளரும். இது நாளடைவில் வளர்ந்து புற்றுநோயாக மாறும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இரத்தத்தை உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளுங்கள்.
பணி செய்யும் சூழல் : சிலர் ஆபத்தான இடங்களில் வேலை செய்வம் கூட புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது. குறிப்பாக நிலக்கரி, உலோகம் மற்றும் ரப்பர் போன்ற தொழில்களில் தூசி மற்றும் புகைகளின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். இது வயிற்று புற்றுநோய் உண்டாக காரணமாக அமைகிறது.
குடும்ப வரலாறு மற்றும் மரபணு மாற்றங்கள் : வயிற்று புற்றுநோயை ஏற்படுத்துவதில் மரபணு மாற்றங்களும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒரு குடும்பத்தில் ஏற்கனவே ஒருவருக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அவர்களது வாரிசுகளில் ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயிற்று புற்றுநோயாளிகளில் சுமார் 1% முதல் 3% வரை பரம்பரை ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்த புற்றுநோயானது CDH1 மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறது.
ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று : ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று என்பது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இதனால் வயிற்றில் வலி, அஜீரணம் மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு உண்டாக்கலாம். ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை : வயிற்று புற்றுநோய்யின் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமடைய வாய்ப்புகள் உள்ளது.எனினும் ஆரம்பகால நோயறிதல் ஒரு சவாலாக உள்ளது. இமேஜிங் சோதனைகள், எண்டோஸ்கோபி மற்றும் பயாப்ஸிகள் ஆகிய டெஸ்டுகள் வயிற்று புற்றுநோயை கண்டறிய உதவுகிறது. வயிற்று புற்றுநோய் இருப்பது உறுதியானால் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை செய்யலாம். புற்றுநோயின் நிலை, எந்த இடத்தில் தோன்றியுள்ளது மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்து அதற்கேற்ப சிகிச்சை பெறலாம். உணவுப் பழக்கவழக்கங்கள் முதல் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தினால் நோயின் அபாயத்தை குறைக்க முடியும்.