கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு !
1 கார்த்திகை 2023 புதன் 06:25 | பார்வைகள் : 3157
கவர்னர் ரவி மீது, உச்ச நீதிமன்றத்தில் நேற்று, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டசபை மசோதாக்களுக்கு, உடனடி ஒப்புதல் அளிப்பதை தவிர்க்கிறார் என, மனுவில் புகார் கூறியுள்ள தமிழக அரசு, இந்த விவகாரத்தில், கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
தமிழகத்தில், கவர்னருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல், உச்சத்தில் உள்ளது. ஆளும் தரப்பும், கவர்னரும் கொள்கை ரீதியாக மாறுபட்டு நிற்பதால், பல விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

அரசு அனுப்பும் கோப்புகளுக்கு, கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிப்பதில்லை. பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி, அரசிடம் விளக்கம் கேட்கிறார்.
நெருக்கடி
அரசு அளிக்கும் விளக்கத்தில், திருப்தி ஏற்பட்டால் மட்டுமே, கோப்புகளில் கையெழுத்திடுகிறார்; இல்லையெனில், திருப்பி அனுப்புகிறார். இந்த நடைமுறை தொடர்வதால், ஆளும் தரப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஒப்புதல் அளிக்காத கவர்னர், சில மாதங்களாக கிடப்பில் வைத்த பின், அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
கொந்தளித்த அரசு தரப்பு, அந்த மசோதாவை, மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னருக்கே அனுப்பியது. சட்ட விதிகளின்படி, அதை அவரால் அரசுக்கு திருப்பி அனுப்ப இயலாது. அதனால், அதை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விவகாரத்தில், கவர்னரை மாற்ற வேண்டும் என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கொடி துாக்கின. அக்கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதியிடம் மனு அளித்தனர். கவர்னருக்கு எதிராக, பகிரங்கமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதற்கிடையில், பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்க வழி செய்யும் சட்ட மசோதா; சித்த மருத்துவ பல்கலை உருவாக்கும் மசோதா உட்பட, 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டன. அவை அனைத்தும், கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
நினைவூட்டல்
இந்நிலையில், நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும், அரசின் முடிவுக்கும், கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுகுறித்து, அரசு தரப்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும், கவர்னர் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
அதோடில்லாமல், 'நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறேன் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம்' என்றும் பேசி, ஆளும் தரப்பை அதிர வைத்தார்.
இந்த சூழலில், சமீபத்தில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
இது, இரு தரப்புக்கும் இடையிலான மோதலை, உச்சகட்டத்திற்கு தள்ளிய நிலையில், கவர்னர் ரவி மீது, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று, அரசு தாக்கல் செய்துள்ள மனு:
சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசு தன் பணிகளை செய்ய விடாமலும், கவர்னர் இடையூறு செய்கிறார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், பல மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பது, இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது; மேலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும்.
அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அனுமதி கோரும் மசோதா; பல ஆண்டுகளாக சிறையில்இருக்கும் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள்; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்ற அனுமதி கோரும் கோப்பு போன்றவை நிலுவையில் உள்ளன.

அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நியமனம் உட்பட, பல்வேறு நியமனங்கள், கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் தடைபட்டுள்ளன. இதனால், தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கி உள்ளது.
கவர்னர், மாநில அரசு நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், விரோத மனப்பான்மையுடன் செயல்படுகிறார். எனவே, தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும்; அதற்கான கால நிர்ணயம் செய்ய வேண்டும்.
சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ், ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை, கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான காலவரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். கவர்னர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.