இலங்கையில் சீரற்ற காலநிலை - பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
1 கார்த்திகை 2023 புதன் 10:09 | பார்வைகள் : 3900
நில்வள கங்கை மற்றும் அத்தனகல ஓயாவின் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தனகல ஓயாவை அண்மித்த பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்காரணமாக அத்தனகல, கம்பஹா, ஜா-எல மற்றும் வத்தளையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நீர் மட்டம் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அக்குரஸ்ஸ, மாலிபொட, மாத்தறை மற்றும் திஹாகொட பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட நில்வளா கங்கையின் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ளவர்களும் சிறியளவிலான வெள்ள அபாயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டங்களும் உயர் மட்டத்தை பதிவு செய்துள்ளதாகவும், இந்த ஆறுகளின் அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் அதிக மழை பெய்தால், வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.