கேரள குண்டுவெடிப்பு வழக்கு: டொமினிக் மார்ட்டின் குறித்து போலீசார் தகவல்
2 கார்த்திகை 2023 வியாழன் 10:26 | பார்வைகள் : 2772
கேரளாவில், மத வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று, போலீசாரிடம் சரணடைந்த டொமினிக் மார்ட்டின், பயங்கர புத்திசாலி என்றும், தான் செய்த செயலுக்கு அவர் வருத்தப்படவே இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.<br>
தேச விரோத செயல்
கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் உள்ள களமசேரி என்ற இடத்தில், 'யெகோவா' என்ற கிறிஸ்துவ அமைப்பு சார்பில், கடந்த, 29ம் தேதி நடந்த மத வழிபாட்டு கூட்டத்தில், அடுத்தடுத்து வெடி குண்டுகள் வெடித்தன.
இந்த விபத்தில், 3 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசாரிடம் அன்றைய தினமே சரணடைந்தார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், 'யெகோவா அமைப்பு தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது.
'பிற மதங்களையும், நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துகிறது. பல முறை கூறியும் அந்த அமைப்பு திருந்தாததால் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தேன்' என, தெரிவித்து இருந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள அரசு நியமித்துள்ளது. அதே சமயம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, கொச்சியின் அத்தானி என்ற இடத்தில் உள்ள டொமினிக் மார்ட்டினின் வீட்டிற்கு, அவரை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, வெடிகுண்டுகளை தயாரித்த முறை குறித்து, போலீசாரிடம், டொமினிக் மார்ட்டின் செய்து காட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், வெடிகுண்டு களை தயார் செய்ய வாங்கிய பொருட்களுக்கான ரசீதுகளையும் அவர் போலீசாரிடம் காண்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நல்ல சம்பளத்தில், டொமினிக் மார்ட்டின் வேலை செய்து வந்துள்ளார். அங்கிருந்தபடி வெடிகுண்டு திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
கைத்தேர்ந்தவர்
சம்பந்தப்பட்ட அமைப்பின் மத கூட்டம் எப்போது நடக்கிறது என்பதை அறிந்து, இரு மாதங்களுக்கு முன்பு தான், துபாயில் இருந்து கொச்சிக்கு வந்துள்ளார். மேலும் அவர், மின்னணு சாதனங்களை கையாள்வதில் கைத்தேர்ந்தவராக உள்ளார்.
தான் செய்த குற்றச்செயலில் டொமினிக் மார்ட்டின் உறுதியாக உள்ளார். அதற்காக அவர் வருத்தப்படவே இல்லை. பயங்கர புத்திசாலியாக இருந்து வெடிகுண்டு சம்பவத்தை அவர் நிகழ்த்தி உள்ளார்.
இவ்வாறு கூறப்படுகிறது.