கெஜ்ரிவாலை கைது செய்தால் சிறையில் இருந்து ஆட்சி!
2 கார்த்திகை 2023 வியாழன் 12:39 | பார்வைகள் : 2951
மதுபான கொள்கை மோசடி வழக்கில் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்நிலையில், 'கெஜ்ரிவாலை கைது செய்வதே மத்திய அரசின் நோக்கம். அவ்வாறு கைது செய்தால், சிறையில் இருந்து புதுடில்லி அரசு செயல்படும்' என, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2021 - 2022 நிதியாண்டில், மதுபான விற்பனை தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இது தனியார் நிறுவனங்களுக்கும், மொத்த கொள்முதல் விற்பனையாளர்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளதாகவும், இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
வழக்கு பதிவு
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு, துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த, துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவருடைய ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சமீபத்தில் அவருடைய ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இந்த விவகாரத்தில் மோசடி நடந்துள்ளதற்காக அடிப்படை முகாந்திரம் உள்ளது. அதனால் ஜாமின் வழங்க முடியாது' என, உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிஉள்ளது.
இதன்படி, புதுடில்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகளால் கெஜ்ரிவால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக அமலாக்க துறை விசாரணை நடக்க உள்ளது.
மக்களுக்கு சேவை
இந்நிலையில், விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் என, ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால், அரசை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் நேற்று கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால், அரசை யார் வழிநடத்துவது என்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் இணைந்து முடிவு எடுப்பர். கட்சியின் அனைத்து தலைவர்களும் சிறையில் இருக்க வேண்டும் என பா.ஜ., விரும்புகிறது. அவ்வாறு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டால், சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவோம்.
இந்த அரசால் இலவசமாக வழங்கப்படும் மின்சாரம், குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை நிறுத்த வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது. ஆனால், அது நடக்காது. சிறையில் இருந்தாலும், மக்களுக்கு சேவையாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் எம்.பி.,யான ராகவ் சந்தாவும், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்குப் பின் கைது செய்யப்படுவார் என, அச்சம் தெரிவித்துள்ளார்.
அடுத்தது ஸ்டாலின்!
ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி கூறியதாவது:அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. அதனால், இந்த குறுக்கு வழியை பா.ஜ., பயன்படுத்துகிறது. அவர் ஊழல் செய்தார், மோசடி செய்தார் என்பதற்காக கைது செய்யப்பட மாட்டார். பா.ஜ.,வுக்கு எதிராக பேசியதால் கைது செய்யப்படுவார்.
அடுத்ததாக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது கை வைப்பார்கள். பீஹாரில் கூட்டணியை முறிக்க முடியாததால், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது அடுத்த இலக்கை வைப்பார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரையும் குறி வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.