உருளைக்கிழங்கு Roast (ரோஸ்ட்)
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10629
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் அதனை ரோஸ்ட் செய்து சாம்பார் சாதத்துடன் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். உங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட்டின் மிகவும் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்பு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை டோஸ்ட் செய்ய வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!