Paristamil Navigation Paristamil advert login

நாட்டுக்கு ஆபத்தாக மாறும் புலம்பெயர்வு

நாட்டுக்கு ஆபத்தாக மாறும் புலம்பெயர்வு

2 கார்த்திகை 2023 வியாழன் 10:04 | பார்வைகள் : 2841


இலங்கையின் அதிகமான மூளைசாலிகள் வெளியேறிய காலப்பகுதி 1980களில் ஆகும். அப்போதைய காலங்களில் அநேகமாக வடக்கு, கிழக்கு தமிழர்களே நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்கள். குறிப்பாக துடிப்பாக தொழில் பார்க்கக்கூடிய இளவயதுடையவர்கள்.

அதற்குக் காரணம் இலங்கையின் அரசியல், கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் கொடுத்த விரக்திகளாகும். அது யுத்த காலம் என்பதும் கூட. சில காலங்களில் சிறிய சிறிய புலம் பெயர்வுகள் நிரந்தரமாகவும், தொழிலுக்காகவும் என நடைபெற்று வந்தன.

இன்றைய நிலையில் நடைபெற்று வருகின்ற புலம்பெயர்வுகள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் பொருளாதாரச் சிக்கலின் காரணமாக நடைபெற்று வருகிறது. இது தற்போதைய அரசாங்கத்தாலும், அரசியலாலும் சரிசெய்ய முடியாததாக மாறிவிட்டதாகவே கூறமுடியும்.

பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகின்ற ஒன்றாகிப்போனதால் அடி மட்ட மக்கள் முதல் நடுத்தர மக்கள் மற்றும் வசதிபடைத்தவர்களையும் இச் சிக்கல் தள்ளியுள்ளதாகவே கொள்ளமுடியும். இது நாட்டின் அறிவாளிகள் மற்றும் தொழில் வல்லுநர்களின் வெளியேறலுக்குக் காரணமாக மாறிவிட்டது.

இலங்கையின் திறைசேரியின் டொலர் கையிருப்பைச் சீர்செய்து கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் சேவைக்காலக் கணிப்புடன் ஸ்ரீ, பதவி உயர்வுகளுக்கான சலுகைகளுடன் விடுமுறையில் வெளிநாடு சென்று தொழில் புரியலாம் என ஒரு சலுகையை வழங்கியதையடுத்து, சாதாரண உத்தியோகத்தர்கள் முதல் உயர் பதவிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் என வல்லுநர்கள் வரிசைகளே வெளிநாடுகளை நாடத் தொடங்கியது.

அது தவிரவும், முகாமைத்துவ நிலைகளில் பணியாற்றியவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் எனப் பலரும் நாட்டைவிட்டுச் சென்றனர். இதில் முக்கியமாக குடும்பம் குடும்பமாக வெளியேறல்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலை, உதாரணமாக வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. முகாமைத்துவ நிலைகளில் வல்லுநர்கள் தட்டுப்பாடு, சுகாதாரத் துறையின் செயற்பாட்டுக்கான தாதியர் தட்டுப்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

இதனையடுத்து சரியான முறையில் விடுப்பு பெறாமல் நாட்டைவிட்டுச் செல்லமுடியாது என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள் இரத்துச் செய்யப்பட்டது.

பலர் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு இறுக்கமான முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும் வெளிநாடு செல்பவர்களின் தொகை குறைந்தபாடில்லை என்ற நிலையாகிவிட்டது.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் செப்டெம்பர் நடுப்பகுதி வரையில் 1.5 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் அறிக்கையிட்டிருந்தன.

இது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலமும் தனித்தும் சென்றவர்களது தொகையாகும். இதில் பெருமளவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.

மிகுதியானவர்கள் ஐரோப்பா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளனர். அதனை விடவும் சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மற்றொரு தகவலாக இருக்கிறது.

அதுவும் கூட கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் அதிகரித்தே காணப்படுகிறது. இது ஆபத்தானதாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பல இலட்சம் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் நிலைமையைத் தோற்றுவித்தது. \

நாட்டில் வாழ முடியாத நிலையில் வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கவும், தஞ்சம் கோரவும் நாள் தோறும் பல நூற்றுக்கணக்கானவர்கள்  வெளிநாட்டுத் தூதரகங்களின் முன்னாலும் அவற்றின் முகவர் நிறுவனங்களிலும் நின்ற வண்ணமுள்ளனர்.

கடந்த வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று எண்ணிக் கொண்டிருந்த மக்களுக்கு அதற்கு முகம் கொடுக்க முடியாத நிலையையே ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதே உண்மை.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்று நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைச் சீர் செய்யலாம் என்று கருதிக் கொண்டிருந்த நாட்டு மக்கள் மீது அரசாங்கம் முழுச் சுமையையும் திணித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியானது  மக்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்பு தொடர்பிலான கரிசனையை இல்லாமல் செய்து வருகின்றது. ஒரு குடும்பம் தம்முடைய வருமானத்தில் 75 வீதத்துக்கும் அதிகமான பணத்தை உணவுக்காக செலவிடுகின்றது. இருந்தாலும்,
உணவு, மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவைக் குறைத்து வருகின்றனர் என்பது அண்மைய ஆய்வுகளின் மூலமான தகவலாகும்.

பொருளாதார நெருக்கடிகளின்போது மனித மூலதனம் வெளியேற்றம் பொதுவானதாக இருந்தாலும் அதற்கான தீர்வை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதே இன்றைய நிலையில் நிதர்சனமாகும். அரசாங்கம் ‘அத்தியாவசிய பொருட்களுக்கான’ செலவுகளைக் குறைப்பதற்காகக் கூட எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு விரோதமாகச் செயற்பட முனைவதுடன், பதிலளிக்காமலும் இருக்க முனைகிறது என்பதே உண்மை. அதனால்தான், கண்துடைப்பான வேலைகளை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தினை மீட்க முடியாது என்பது தொழில்துறையினரது குற்றச்சாட்டாக இருக்கிறது.

பலர் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்ற அதேவேளை, நாளாந்தம் கூலித்தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியாத மக்கள் பலர் படகுகள் மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுகிற இதேவேளை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.

ஆனாலும் கடந்த வருடம் முதல் 800 வரையானோர் இந்தியாவின் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிலை இலங்கையில் யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் அதிகமானோர் படகுமூலம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றமையை நினைவூட்டுவதாகவே இருக்கிறது.

அன்றைய காலங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக நாட்டைவிட்டுத் தப்பிசென்றமையினால் இலங்கை அரசாங்கம் கண்டும் காணாமலிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் உருவாகியிருந்தது.

அந்தவகையில்தான், வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பானது நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சம் தற்போது உருவாகி வருகிறது. தொலைநோக்கற்ற தீர்மானங்களால் தோன்றியிருக்கின்ற இந்த நிலையானது கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை உருவாக்கியிருப்பதானது இலங்கையைக் கடுமையான நெருக்கடியையே தோற்றுவிக்கும் என்ற அச்சமும் உருவாகிவருகிறது.

குறிப்பாகத் தலைமை அல்லது உயர்நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் வெளியேற்றமானது கீழ்நிலையிலுள்ளவர்கள் அப்பொறுப்புக்களுக்கு உடனடியாக உள்வாங்கப்படுகின்ற நிலையைத் தோற்றுவிக்கின்றன.

இது உற்பத்தித் துறையிலும் சேவைகள் துறையிலும் மிகக்குறைந்த உற்பத்திகளைக் கொண்டுவருவதுடன் முழுமையான அல்லது உயர்நிலையான தன்மையை இல்லாமல் செய்துவிடும் என்பதே அந்த அச்சமாகும்.

கொவிட் பெருந் தொற்று உருவான 2019 இறுதிப்பகுதி முதல் இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த முடிவுகள் பாரதூரமான சிக்கலைத் தோற்றுவித்திருந்தது. அதன் பின்னரான அரகலய மற்றும் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவந்தது.

இருந்தாலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருக்கிறது அது மோசமடையும் என்ற எதிர்வு கூறல்கள் இருந்தபோதிலும் குறுகிய சிந்தனையுடன் எடுக்கப்பட்ட முடிவுகள் இவ்வாறான மோசமான நிலைக்கும் தள்ளிவிட்டது என்பதே உண்மையாகும்.  மூளைசாலிகளின் வெளியேற்றமும், தொழிற்படையின் வெளியேறலும்  அதிகரிக்கத் தொடங்கியமைக்கு இதுவும் ஒரு காரணமே.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்பாடாத வரையில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து செல்வச் செழிப்புடன் வாழும் தமிழர்கள் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவியளிக்க மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. நிலைமை இவ்வாறிருக்க வெளிநாடுகளுக்கு இலய்கையிலுள்ளவர்கள் சென்று வருமான மீட்டுவதன் மூலம் மாத்திரம் நாட்டை மீட்க முடியும் என்ற மிகச் சிறிய தனமான எண்ணம் இலங்கை அரசாங்கத்திடம் இருக்கிறதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இருப்பினும் இலங்கையின் உற்பத்தித்துறையில் ஏற்பட்டு வருகின்ற வீழ்ச்சி நிலை இன்னமும் நாட்டை வருடக்கணக்கில் பின் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பது மற்றொரு நிலையாகும்.

 இந்த வகையில்தான் மக்களை ஏமாற்றுகின்ற தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கப்படுகிறது. ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கல் தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கை வருகிறது. சீனா கடன் மறுசீரமைப்புக்கு உத்தரவாதமளித்துள்ளது.

சர்வதேச நாயண நிதியத்தின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்குக் கடன் மறுசீரமைப்பு அவசியம் என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடியுங்கள் போன்றவற்றினைக் காண்பிக்கமுடியும்.

இவ்வாறான மூளைசாலிகளின் வெளியேற்றமும், தொழிற்படையின் வெளியேறலும்  நாட்டை மீட்சிக்குக் கொண்டு செல்லாது என்பதுடன் மோனமானதொரு காலங்களுக்குள் தள்ளிவிடும் என்பதே பொருளாதாரம் சார் சிந்திப்பவர்களுக்கிருக்கின்ற கவலையாக இருக்கிறது. இதற்கான தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையோடு நகர்ந்து செல்வோம்.

நன்றி தமிழ்mirror

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்