வெங்காய கொத்தமல்லி சட்னி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10551
இட்லி, தோசை போன்றவற்றிற்கு தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக வெங்காய கொத்தமல்லி சட்னியை செய்து சுவைத்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த வெங்காய கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4-5 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள்
கொத்தமல்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் அந்த வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், வெங்காய கொத்தமல்லி சட்னி ரெடி!!!