பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது: ஐகோர்ட்டில் சசிகலா தரப்பு வாதம்
2 கார்த்திகை 2023 வியாழன் 20:26 | பார்வைகள் : 3637
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்த போது சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா, சென்னை மாவட்ட சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்ட சிவில் கோர்ட்டு, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதி்ர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம் வருமாறு: அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் போன்ற மூத்த தலைவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியை வகித்த சசிகலாவை அப்பதவியி்ல் இருந்து நீக்கியது செல்லாது.
அதற்கான நடைமுறையே சட்டவிரோதமானது. அ.தி.மு.க.,வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., எந்த நோக்கத்துடன் விதிகளை உருவாக்கினாரோ, அந்த விதிகளுக்குப் புறம்பாக, கட்சி விதிகளை இஷ்டம்போல திருத்தம் செய்துள்ளனர்'' என்று வாதிட்டனர்.