Paristamil Navigation Paristamil advert login

சுண்டக்காய் வத்தக்குழம்பு

சுண்டக்காய் வத்தக்குழம்பு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10873


 மதியம் எப்போதும் காய்கறிகளைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சுண்டக்காய் வற்றல் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். அதிலும் வெள்ளை சாதத்துடன் இதனை போட்டு பிசைந்து, அப்பளத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். 

 
சரி, இப்போது அந்த சுண்டக்காய் வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 
 
தேவையான பொருட்கள்: 
 
நல்லெண்ணெய் - 1/4 கப் 
காய்ந்த சுண்டக்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 10 பற்கள் (தோலுரித்தது) 
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் 
புளி - 1 எலுமிச்சை அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் கையால் பிசைந்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த சுண்டக்காயை போட்டு மொறுமொறுவென்று வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். 
 
பின்பு அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் புளிச்சாறு, மசாலாப் பொடிகள், உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். 
 
பின் அதில் வறுத்து வைத்துள் சுண்டக்காயை சேர்த்து, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டக்காய் வத்தக்குழம்பு ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்