Paristamil Navigation Paristamil advert login

தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு.. சுவாச கோளாறுகளால் அவதிப்படும் டெல்லி மக்கள்

தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு.. சுவாச கோளாறுகளால் அவதிப்படும் டெல்லி மக்கள்

3 கார்த்திகை 2023 வெள்ளி 08:40 | பார்வைகள் : 3203


டெல்லியில் கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இன்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது.

காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டு மொத்த தரக் குறியீடு (AQI) 346 ஆக உள்ளதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (மூன்றாவது முனையம்) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் முறையே  438, 491, 486, 473 என்ற அளவில் உள்ளது.

காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகிறார்கள். இதன் மூலம் காற்று மாசு சற்று குறையும் என கருதப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக அங்குள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  தேவையற்ற கட்டிட வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பலர் மூச்சுத் திணறல், சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுபற்றி அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர் நிகில் மோடி கூறுகையில், "காற்று மாசு அடைவதால் இருமல், சளி, கண்களில் நீர் வடிதல் மற்றும் எரிச்சல், சுவாசப் பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுவாசப் பிரச்சினை உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து வயதினரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாஸ்க் அணியவேண்டியது அவசியம்" என்றார்.

மாசு அளவு அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளை மோசமாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்