காஸா அருகே நிலைகொண்டுள்ள பிரான்சின் அவசரப் பிரிவு மருத்துவமனை வசதியுடன் கூடிய கப்பல்!!
4 கார்த்திகை 2023 சனி 16:40 | பார்வைகள் : 3600
பிரான்சுக்குச் சொந்தமான விமான தாங்கி கப்பல் ஒன்று காஸாவுக்கு அருகே மத்திய தரைக்கடலில் நிலைகொண்டுள்ளது. அவரச சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையுடன் குறித்த கப்பல் அங்கு சேவை வழங்கி வருகிறது.
சாள்-து-கோல் என பெயரிடப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஒன்றே அங்கு நிலைகொண்டுள்ளது. 20,000 டொன் எடைகொண்ட குறித்த கப்பலில், இரண்டு சத்திரசிகிச்சை அரங்கும், 60 பேருக்கான கட்டில்களும் அதில் அமைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க பிரெஞ்சு இராணுவத்தினரால் வழி நடத்தப்படும் குறித்த கப்பலில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளடங்கியுள்ளன.
காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களை உலங்கு வானூர்தி மூலம் அழைத்துச் சென்று குறித்த கப்பலில் தரை இறக்கி, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேல், ஜோர்தான், எகிப்த் போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, மேற்படி மருத்துவக் கப்பல் குறித்து அறிவித்திருந்தார். மேற்படி கப்பலானது கடந்த வாரம் பிரான்சின் தெற்கு நகரமான Toulon இல் இருந்து புறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் இரு கப்பல்கள் காஸா பகுதி நோக்கி செல்ல உள்ளதாகவும் அறிய முடிகிறது.