பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை - பிரதமர் மோடி
5 கார்த்திகை 2023 ஞாயிறு 20:48 | பார்வைகள் : 2667
மத்தியப் பிரதேசம் மாநிலம் சியோனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கோவிட் தொற்று காலத்தில், நம் நாட்டு மக்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம் மேலும் ஏழை மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட கூடாது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். அதனால் தான் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கினோம்
டிசம்பர் மாதத்தில் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்குவது முடிவடைய உள்ளது.. ஆனால் ஏழைகளின் வலியை உணர்ந்த நாங்கள், டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.
நான் வறுமையில் இருந்து முன்னேறி வந்துள்ளேன். ஏழ்மை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. பழங்குடியினர் நலனில் காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகு, 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் பழங்குடியினருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை.
2014க்கு முன், காங்கிரசின் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திலும் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இப்போது பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. ஏழைகளின் உரிமைகளுக்காக நாங்கள் சேமித்த பணம் இப்போது ஏழைகளுக்காக செலவிடப்படுகிறது. இது தான் காங்கிரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம், இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பம்லேஸ்வரி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.