திசை தெரியாது தடுமாறும் இலங்கை அரசாங்கம்
5 கார்த்திகை 2023 ஞாயிறு 13:51 | பார்வைகள் : 2459
இலங்கையின் இனப் பிரச்சினையோடு தொடர்புடைய 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக நிறைவேற்றுவதாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கு என்ன நடந்தது?
இனப் பிரச்சினையை தீர்க்காமல் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று அவர் கடந்த வருடம் புதிய பாராளுமன்ற அமர்வைத் திறந்து வைத்து முன்வைத்த தமது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டார். ஆனால், கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இனப் பிரச்சினையைப் பற்றி எவரும் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.
இப்போது ஜனாதிபதி நாட்டின் தேர்தல் சட்டங்களை மாற்றப் போவதாகக் கூறுகிறார்.
அதற்காக அவர் ஒக்டோபர் 16ஆம் திகதி வர்த்தமானி மூலம் முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்து இருக்கிறார். புதிய அரசியலமைப்பில் என்ன? என்ன விடயங்கள் உள்ளடப்பட வேண்டும் என்பதையும் அவர் அக்குழுவினருக்கு அந்த வர்த்தமானி மூலம் ஆலோசனை வழங்கியிருக்கிறார். ஆனால், இனப் பிரச்சினை தொடர்பாக அவர் எவ்வித ஆலோசனையும் அந்த குழுவினருக்கு வழங்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக அவர் வேறு ஆலோசனைகளையாவது வழங்கவில்லை.
தேர்தல் சட்டத் திருத்த விடயத்திலும் அரசாங்கத்துக்குள் பொது இணக்கப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதி மேற்படி குழுவை நியமித்து இரண்டு நாட்களில் பிரதமர் தினேஷ் குணவர்தன அதே நோக்கத்துக்காக அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றைக் கூட்டியிருந்தார். அதற்கிடையே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு தோகுதி வாரியாக 160 உறுப்பினர்களையும் தேசிய மற்றும் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் 65 உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்காக எண்ணக்கருப் பத்திரம் (Concept paper) ஒன்றை அமைச்சரவையிடம் சமர்ப்பித்திருக்கிறார்.
இந்த மூவரில் ஒருவர் செய்வதை மற்ற இருவருக்கும் தெரியாது போல் தான் தெரிகிறது. ஆயினும் அவர் அவற்றை மதியாது அதே நோக்கத்துக்காகக் குழுவொன்றை நியமித்து இருக்கிறார். ஜனாதிபதியும் ஆளும் கட்சியும் நிர்வாக விடயங்களில் இணைந்து செயற்படுவதில்லை என்பது கடந்த திங்கட்கிழமை மற்றொரு விடயத்திலும் தெரிய வந்தது. தற்போதைய நிலையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று அன்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். எனினும் எதிர்வரும் வரவு- செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அன்றே ஜனாதிபதி கூறியிருந்தார்.
அரசாங்கம் இவ்வாறு தடுமாறும் நிலையில், ஜனாதிபதிக்கும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் சில கருத்து முரண்பாடுகள் முற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. ராஜபக்ஷக்களுக்கு மிகவும் நெருக்கமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன போன்றவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று பொதுஜன முன்னணி கடந்த வருடம் முதல் ஜனாதிபதியிடம் கோரி வருகிறது. ஆனால், ஏதோ காரணங்களுக்காக ஜனாதிபதி அதனை நிறைவேற்றவில்லை.
அதனால் தமது கட்சியின் வாக்குகளால் ஜனாதிபதி பதவியைப் பெற்ற ரணில் விக்ரமசிங்க அக்கட்சியை மதிப்பதில்லை என்று பொதுஜன முன்னணியினர் சில மாதங்களாகக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி கடந்த 23ஆம் திகதி அமைச்சரவையில் சிறிய மாற்றமொன்றை மேற்கொண்டார்.
அதன் படி நான்கு பேரின் பொறுப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன. கெஹெலிய ரம்புக்வெல்லயிடம் இருந்த சுகாதார அமைச்சு அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் வழங்கப்பட்டுள்ளது.
ரமேஷ் பத்திரணவிடம் இருந்த பெருந்தோட்டத்துறை அமைச்சு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வழங்கப்பட்டுள்ளது. எம்.பி. பதவியை இழந்த நஸீர் அஹமத்திடம் இருந்த சுற்றாடல்துறை அமைச்சை சில நாட்களாக தம்மிடம் வைத்திருந்த ஜனாதிபதி அதனை கெஹெலியவிடம் கொடுத்திருக்கிறார். நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பெருந்தோட்டத்துறைக்கும் இராஜங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரமேஷ் பத்திரண ஒரு மருத்துவராவார். அவர் இது வரை ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகவில்லை. அவரிடம் சுகாதார அமைச்சை கையளித்தமை பொருத்தமாகும். அதேவேளை, விவசாய அமைச்சரிடமே பெருந்தோட்டத்துறையையும் கையளித்தமையும் பொருத்தமான விடயமாகும்.
இதில் பெருந்தோட்டத்துறையை மஹிந்த அமரவீரவிடம் கொடுத்தமை எவ்வளவு பொருத்தமானதாக இருந்த போதிலும், பொதுஜன முன்னணியினர் அதை எதிர்க்கின்றனர். தமது கட்சி உறுப்பினர் ஒருவரிடம் இருந்த ஓர் அமைச்சுப் பொறுப்பை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்ததாகவே அவர்கள் குறைகூறுகின்றனர். அவர்களுக்கு அரசியல் போட்டாபோட்டியே முக்கியமாக இருக்கிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தோடு பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எதிர்வரும் வரவு- செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பாக தமது கட்சி ஆராய்ந்து வருவதாக பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோப்) தவிசாளர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார கூறியிருந்தார்.
வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் அமைச்சரவை தாமாகவே கலைக்கப்பட்டதாகக் கருதப்படும். அதனை அடுத்து ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும். அது ஜனாதிபதியை பாதிக்காது.
ஜனாதிபதி இதற்கு முன்னரும் பொதுஜன முன்னணியை பொருட்படுத்தாது செயற்பட்டு இருக்கிறார். கடந்த வருடம் தாம் பதவிக்கு வந்து ஒரு மாதத்துக்குள் அதாவது கடந்த வருடம் ஓகஸ்ட் 1ஆம் திகதி அவர் ஜனாதிபதி கோட்டாபயவால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் ஆறு அமைப்புகளினதும் 316 நபர்களினதும் தடையை நீக்கினார். இது தொடர்பாக அவர் ஆளும் கட்சியின் ஆலோசனையைப் பெறவில்லை.
இவ்வாறு தம்மைப் பதவியில் அமர்த்திய ஆளும் கட்சியைச் சீண்டிக் கொண்டு இருக்கும் ரணில், நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சகல அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று கூறியிருந்தார். கடந்த வருடமும் அவர் சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவப் போவதாக அறிவித்து இருந்தார்.
ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை நேர்மையானதாக இருந்தால் வெறுமனே அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவன்றி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு திட்டத்தின் கீழ் தான் கட்சிகள் ஒன்று சேர வேண்டும். கடந்த வருடம் அவர் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைப் பற்றி ஆலோசனை முன்வைத்த போது, வீரவன்சவின் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் பொதுவான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு கூறிய போது அதனை அவர் பொருட்படுத்தவில்லை.
அதாவது அவ்வாறானதொரு திட்டம் ஜனாதிபதியிடம் அப்போதும் இருக்கவில்லை, இப்போதும் இல்லை. குறைந்தபட்சம் முக்கிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியும் ஆளும் கட்சியுமாவது கலந்துரையாடுவதாகத் தெரியவில்லை. எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்பதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி அக்கட்சிகளின் விமர்சனங்களை நிறுத்துவதற்காகவே தெரிகிறது. இது பொதுஜன முன்னணியை மேலும் சீண்டுவதாகவே அமையும்.
ஆட்சி அதிகாரத்தில் தம்மோடு இணைந்து இருப்பவர்களை இவ்வாறு சீண்டும் போக்கு ரணிலிடம் இருக்கிறது. 2001இல் பிரதமராகப் பதவியேற்ற போது, ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க, புலிகளுடன் ரணில் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையையோ சமாதான பேச்சுவார்த்தைகளையோ குழப்பாத நிலையிலும் ஐ.தே.க. தலைவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் ஆத்திரமூட்டி இறுதியில் அவர் ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை 2004 பெப்ரவரி மாதம் கலைத்துவிட்டார்.
அதேபோல் 2015இல் மைததிரிபால சிறிசேனவுடன் அரசாங்கத்தை கைப்பற்றிய ரணில், பின்னர் ஜனாதிபதியாக இருந்த மைத்திரியை புறக்கணித்து செயற்படவும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தடுக்கவும் முற்படவே இருவருக்கும் இடையே முறுகல் நிலை உருவாகியது. அது 2018இல் மைத்திரி சட்டவிரோதமான முறையில் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் அளவுக்கு சென்றது.
ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே எவ்வித முறுகல் நிலை இருந்த போதிலும் பொதுஜன முன்னணி ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யவோ அல்லது ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுஜன முன்னணியின் ஆட்சியை கவிழ்க்கவோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றே ஊகிக்கலாம்.
நன்றி தமிழ்Mirror