Paristamil Navigation Paristamil advert login

ஆர்.எஸ். பாரதி பேச்சால் அடுத்த சர்ச்சை! கவர்னர் ரவி கண்டனம்

ஆர்.எஸ். பாரதி பேச்சால் அடுத்த சர்ச்சை! கவர்னர் ரவி கண்டனம்

6 கார்த்திகை 2023 திங்கள் 09:26 | பார்வைகள் : 2856


சனாதனம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுவர்' என, மலைவாழ் பழங்குடியினரான,  'நாகா' இன மக்கள் குறித்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில், 'இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது' என, ஆர்.எஸ்.பாரதிக்கு, கவர்னர் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம், அம்பத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

பா.ஜ., ஆட்சியில், அமலாக்கத் துறையானது, 'என்போர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட்' என்பதற்கு பதிலாக, 'என்டர்டெய்ன்மென்ட் டிபார்ட்மென்ட்' ஆகிவிட்டது. அமைச்சர் வேலு வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.

இதில், வேடிக்கை என்னவென்றால், சோதனைக்கு வருபவர்கள், 15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர்.

தி.மு.க., தொண்டன், எதிரில் எதாவது வந்தால் தான், எழுந்து நின்று சந்திக்கக் கூடிய துணிவையும், தெம்பையும் பெறுவான். கவர்னரோ, மக்கள் வரி பணத்தில் சாப்பிட்டு விட்டு, நம் தலையில் கொள்ளி வைக்க நினைக்கிறார்.

என்னிடம் பேசும் பழைய கட்சிக்காரர்கள்,'நீ, ஜெயலலிதாவையே வழக்கு போட்டு உள்ளே அனுப்பினாய்; கவர்னரை எவ்வளவு நாளைக்கு வெளியே விடப் போகிறாய்' என்று கேட்கின்றனர்.

நான், அவன் இவன் என்று பேசுகிறேன் என நினைக்கக் கூடாது. என்னிடம் அவர்கள் சொன்னதை தான் சொன்னேன். 'தினமலர்' நாளிதழ் நிருபர், கவர்னரை ஆர்.எஸ்.பாரதி ஒருமையில் பேசி விட்டார்; அவரது நண்பர் ஒத்து ஊதினார்' என்று, செய்தி போடுவான். 

'ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி தண்டனை வாங்கி தந்த நீங்கள், ஆட்டம் போடும் கவர்னரை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே' என்று, தி.மு.க.,வினர் ஆவேசத்துடன் கேட்கின்றனர்.

'யார் பிரதமராக வேண்டும் என்பது முக்கியமல்ல; யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம்' என்று ஸ்டாலின் பேசிய இந்த ஒற்றை வரி தான், 'இண்டியா' கூட்டணியில், 28 கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் இணைத்து வைத்தது. 

மம்தா, உத்தவ் தாக்கரே போன்றவர்கள், ஸ்டாலின் பேசிய பின் தான் மனம் மாறினர். பலரும் போட்டி போட்டு இண்டியா கூட்டணியில் சேர, ஸ்டாலின் வகுத்த வியூகமே காரணம். தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என, பிரதமர் மோடி திட்டமிட்டு செயல்படுகிறார். ராஜஸ்தான், அந்தமான் போனாலும் ஸ்டாலினை தான் விமர்சிக்கிறார். 

முப்படைகள் எதிரிகளை தாக்குவது போல, ஐ.டி., - இ.டி., - சி.பி.ஐ., என்ற மூன்றையும் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை நசுக்கப் பார்க்கிறார் மோடி. ஸ்டாலின் எதற்கும் தயாராகி விட்டார். தி.மு.க., ஆட்சி கலைக்கப்படும் என்று, சிலர் கனவு காண்கின்றனர்; சத்தியமாக முடியாது. காரணம், எஸ்.ஆர்.பொம்மை வழக்கிற்கு பின், ஆட்சியை இஷ்டத்துக்கு கலைக்க முடியாது. 

இங்கே உட்கார்ந்திருக்கிற கவர்னர் ரவி, இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செயல்படுகிறார். வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா; இவரை ஊரை விட்டு விரட்டி அடித்தனர்.

நாகாலாந்துகாரன் நாய்க்கறி சாப்பிடுவான்; நாய்க்கறி தின்கிறவனுக்கே, இவ்வளவு சொரணை வந்து, கவர்னரை ஓட, ஓட விரட்டினான் என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழனுக்கு, எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை, அவர் மறந்து விடக்கூடாது. நாகாலாந்தில் இருந்து, ரவியை வெளியே அனுப்பி வைத்த போது, தீபாவளி பண்டிகை போல, அங்குள்ள மக்கள் கொண்டாடினர். 

மசோதாக்களில் கையெழுத்து போட மறுக்கிற கவர்னர் மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது. அடுத்ததாக, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களும் வழக்கு தொடர்ந்துள்ளன. அவ்வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இது, எல்லா கவர்னர்களுக்கும் பாடமாக இருக்கும். <br><br>இவ்வாறு, ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

இதே கூட்டத்தில் பேசிய காங்., - எம்.எல்.ஏ., இளங்கோவன், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரும், கவர்னர் ரவியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர்.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு, சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. மியான்மரை ஒட்டிய இந்திய பகுதிகளில், 'நாகா' இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மலைவாழ் பழங்குடியினரான நாகா இனத்தினர், நாகாலாந்தில் பெரும்பான்மையாகவும், மணிப்பூர், மேகலாயா மற்றும் அசாமில் சிறுபான்மையினராகவும் வசிக்கின்றனர்.

காயப்படுத்த கூடாது

நாகாலாந்துகாரன் நாய்க்கறி தின்பான்' என, ஆர்.எஸ்.பாரதி தரக்குறைவாக பேசிய பேச்சை மட்டும், கவர்னர் மாளிகை, 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், கவர்னர் ரவி கூறியிருப்பதாவது:

நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என, பகிரங்கமாக இழிவுபடுத்தியது கேவலமானது; இதை ஏற்க முடியாது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என, பாரதியைவலியுறுத்துகிறேன்.


இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.

மலிவான பேச்சுகளை ஆதரிக்க கூடாது

நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, 'ஆணாய் பிறந்து வீணாய் போனவர்' என்று பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, பிரதமர் மோடியின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்தும் விமர்சித்துள்ளார். இதெல்லாம் அநாகரிகமானது; பண்பாடற்றது. 

தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதிக்கு நல்லதை பேச கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு வினைக்கு எப்போதும் எதிர்வினை உண்டு. எதிர்வினையாற்ற ஒரு நொடி போதும். அரசியல் நாகரிகம் கருதி, தமிழக பா.ஜ., அமைதி காக்கிறது. 

மலிவான அரசியலை முன்னெடுத்து, தரக்குறைவான பேச்சுகளை மக்கள் மத்தியில் பேசுவது முறையற்றது என்பது, ஆர்.எஸ்.பாரதி போன்ற மூன்றாம் தர பேச்சாளர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், பொறுப்பான பதவியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மலிவான அரசியல் பேச்சுகளை ஆதரிக்கக்கூடாது. அதிகாரம் நிலையானது அல்ல என்பதை முதல்வர் உணர்ந்து, கட்சியினர் வாயை கட்ட வேண்டும். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்