கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக மெத்தியூஸிற்கு ஏற்பட்ட நிலை
6 கார்த்திகை 2023 திங்கள் 12:26 | பார்வைகள் : 4404
அஞ்சலோ மெத்தியூஸ் ஆடுகளத்திற்குள் நுழைந்து 3 நிமிடங்களுக்கு மேலாகியும் துடுப்பெடுத்தாடாமையால் பங்களாதேஷ் அணித் தலைவர் சகிப் அல் ஹசன் ஆட்டமிழப்பை நடுவரிடம் கோரிய நிலையில், நடுவரால் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டு மெத்தியூஸ் காலக்கெடுவில் ஆட்டமிழந்து ஆடுகளத்தைவிட்டு வெளியேறிய சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை அணி துடுப்பெடுத்தாடிவரும் நிலையில், இலங்கை அணி 140 ஓட்டங்களைப் பெற்றபோது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்நிலையில், துடுப்படுத்தாடுவதற்காக மெத்தியூஸ் ஆடுகளத்திற்கு நுழைந்தார். இதன்போது மெத்தியூஸின் தலைக்கவசம் அணிவதற்கு ஏற்றாற்போல் இல்லாமையால் அதனை மாற்றுவதற்கு கேட்டுள்ளார்.
மெத்தியூஸ் மைதானத்திற்குள் நுழைந்தார், ஆனால் அவர் உள்ளே நுழைந்தபோது, அவரது தலைக்கவசத்தின் ஸ்ட்ராப் சரியாக வேலை செய்யாததை அவதானித்தார். உடனே மாற்று தலைக்கவசத்தை வெளியில் இருந்து எடுத்துவருமாறு கோரினார் தலைக்கவசம் வருவதற்கு தாமதமாகியதில் அந்த 3 நிமிடங்கள் கழிந்தது.
அஞ்சலோ மெத்தியூஸ் ஆடுகளத்திற்குள் நுழைந்து 3 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் துடுப்பெடுத்தாடாமையால் பங்களாதேஷ் அணித் தலைவர் சகிப் அல் ஹசன் ஆட்டமிழப்பை நடுவரிடம் கோரினார்.
இந்நிலையில், நடுவரும் ஆட்டமிழப்பை வழங்கியதால் மெத்தியூஸ் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வாறு காலக்கெடுவில் ஆட்டமிழந்து வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கிரிக்கெட் விதிமுறைகளின் படி , ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் ஆடுகளத்திற்குள் நுழைந்த, மூன்று நிமிடங்களுக்குள் தனது முதல் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எனவே மெத்தியூஸ் இந்த விதியின் கீழ் ஆட்டமிழந்துள்ளார்.
இதேவேளை, மெத்தியூஸ் ஷகிப்பிடம் பேச முயன்றார். ஷாகிப் போதுமான அளவு மகிழ்ச்சியுடன் பதிலளித்தார், ஆனால் ஆட்டமிழப்புக் கோரி நடுவரிடம் மேற்கொண்ட முறையீட்டை திரும்பப் பெறவில்லை.
மெத்தியூஸ் ஆடுகளத்தைவிட்டு வெளியேறும் போது ஏமாற்றத்துடன் தலைக்கவசத்தை தூக்கி எறிந்தார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இலங்கை வீரருமான சந்திக ஹதுருசிங்கவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதேநேரம் நேரடி வர்ணனையில் ஈடுபட்டிருந்த வக்கார் யூனிஸ் இது விளையாட்டுக்குரிய செயல் அல்ல எனவும் இது கிரிக்கெட்டின் புனிதத் தன்மையை பதிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.