'harcèlement scolaire' ஐந்தில் ஒரு மாணவர் பாடசாலை துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
7 கார்த்திகை 2023 செவ்வாய் 18:02 | பார்வைகள் : 3468
பிரான்சில் அண்மைக் காலமாக அதிகம் பேசப்படும் மாணவர்களுக்கு இடையில் நடைபெறுகிற பாடசாலை துன்புறுத்தல் (harcèlement scolaire) பற்றிய ஆய்வு ஒன்றை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையில் மேற்கொண்டு அதன் முடிவுகளை l'association Marion la main tendue மற்றும் Head & Shoulders இன்று வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆய்வின்படி ஐந்து மாணவர்களில் ஒருவர் உடல், வாய்மொழி அல்லது உளவியல் ரீதியாக, ஒவ்வொரு நாளும் அல்லது வாரத்தில் பல முறை பாடசாலை துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பாடசாலைகளில் 27% சதவீதமும் நடுநிலை பாடசாலைகளில் 53% சதவீதமும், உயர்நிலைப் பாடசாலைகளில் 66% சதவீதமும் பாடசாலை துன்புறுத்தல்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கும் ஆய்வறிக்கை; துன்புறுத்தல்கள் முக்கியமாக விளையாட்டு மைதானத்தில் 94%, தாழ்வாரங்களில் 83%, வகுப்பறையில், பாடசாலை உணவகத்தில் 60%மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் போது 58% நடைபெறுகிறது எனவும் சமூக வலைப்பின்னல்களில் 44% சதவீதமும் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானாலோ அல்லது சாட்சியாக இருந்தாலோ 3020 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி தொடர்பு கொள்ளலாம். இல்லையேல் தேசிய கல்வி அமைச்சின் இணையதளத்திலும் நீங்கள் உங்கள் தகவல்களை பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.