தி.மு.க.,வுடன் கூட்டணியா? மனிதம் சார்ந்தது என்கிறார் கமல்
8 கார்த்திகை 2023 புதன் 10:44 | பார்வைகள் : 2755
தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரமாக பார்க்க முடியாது. அரசியல் கடந்து மனிதம் சார்ந்து இங்கு உள்ளோம்,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறினார்.
சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, நேற்று தன் பிறந்த நாளை முன்னிட்டு, காற்றின் ஈரப்பதம் வாயிலாக சுத்தமான குடிநீர் வழங்கும் இயந்திரத்தை, நடிகர் கமல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு பங்கேற்றனர்.
பின், கமல் அளித்த பேட்டி:
இந்த மருத்துவமனைக்கு, 'வாயு ஜல்' என்ற இயந்திரத்தை வழங்கியிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ராஜ்கமல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள, இதுபோன்ற இயந்திரத்தின் வாயிலாக கிடைக்கும் நீரை தான் பருகி வருகிறேன்; ஆரோக்கியமாகவும் இருந்து வருகிறேன்.
இவ்வாறு நான் செய்வதன் வாயிலாக, இதை விட பன்மடங்கு பெரிதாக செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கருவியை உருவாக்கியவர்கள் இந்தியர்கள், அதுவும் தமிழர்கள். சென்னை ஐ.ஐ.டி.,யில் உருவாக்கப்பட்ட இக்கருவியின் வாயிலாக, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாசில்லாத குடிநீரை அனைவரும் பருக முடியும்.
இந்த நிகழ்ச்சி வாயிலாக, தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரமாக பார்க்க முடியாது. அரசியல் கடந்து மனிதம் சார்ந்து இங்கு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
முதல்வர் நலம்
முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது; தற்போது நலமுடன் உள்ளார். டாக்டர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறார். விரைவில், அவரது பணிகளை வழக்கம் போல மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.