மேகதாது அணையால் தமிழகத்திற்கு பலன் : கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்
9 கார்த்திகை 2023 வியாழன் 07:31 | பார்வைகள் : 2745
காவிரி தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பகிர்ந்தளிக்கப்பட்டபடி, பெங்களூரு நகர், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு, 24 டி.எம்.சி., தண்ணீர் ஒதுக்கி, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது, என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு நகர வளர்ச்சி, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார் புதுடில்லியில் நேற்று கூறியதாவது:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், கர்நாடக அதிகாரிகள் மேகதாது விஷயத்தை பற்றி விவரித்தனர். இதுகுறித்து ஆலோசிக்க, தேதி நிர்ணயிப்பதாக ஆணையத்தினர் நம்பிக்கை அளித்துள்ளனர்.
அனுமதி
அடுத்த வாரம் தேதி முடிவாக வாய்ப்புள்ளது. இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். நமக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும், எவ்வளவு நீர் மிச்சமிருக்கும், கடலுக்கு எவ்வளவு நீர் பாய்ந்து செல்கிறது என்பதை விவரிப்போம்.
காவிரி தீர்ப்பாயம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படியே, பெங்களூரின் குடிநீருக்கு 24 டி.எம்.சி., தண்ணீர் ஒதுக்கியுள்ளோம்.
இதை பயன்படுத்தும்படி, பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு, அரசு உத்தரவிட்டது. இதற்கு முன்பு 18 டி.எம்.சி., தண்ணீர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் கூடுதலாக 6 டி.எம்.சி., தண்ணீர் பயன்படுத்த அனுமதி கிடைத்தது.
பெங்களூரின் தேவைக்கு, 24 டி.எம்.சி., தண்ணீரை ஒதுக்கிவைத்துவிட்டு, மிச்சமுள்ள தண்ணீரை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்த வேண்டும். கே.ஆர்.எஸ்., அணையில் தண்ணீர் உள்ளது.
எங்களுக்கு திறந்துவிடுங்கள் என, தமிழகத்தினர் கேட்கின்றனர். எங்களின் குடிநீருக்கு 24 டி.எம்.சி., தண்ணீர் ஒதுக்கி, 2018ல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் உரிமையை நாங்கள் இழக்கமாட்டோம்.
தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தாலும், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுபடியே, கர்நாடக அரசு முடிவு செய்து, உத்தரவு பிறப்பித்தது. இந்த தண்ணீரை பயன்படுத்த, குடிநீர் வாரியத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் பரப்பளவு ஆனேக்கல் வரை விரிவடைந்துள்ளது. சர்வதேச விமான நிலையத்துக்கு குடிநீர் வினியோகித்தே ஆக வேண்டும். இதற்கு முன் நான் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ஹெப்பாலை தாண்டி காவிரி நீர் வினியோகிக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டது.
அதன்பின் வந்த அரசுகள், உத்தரவை மாற்றின. தற்போது அனைத்து இடங்களுக்கும் காவிரி நீர் வினியோகிக்க வேண்டியுள்ளது. பெங்களூரு வடக்கு பகுதி, அதிவேகமாக வளர்கிறது.
மேகதாது திட்டம், தமிழகத்துக்கு உதவியாக இருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தில் சில நதிகள் இணைப்பது குறித்து, தற்போதைக்கு என்னால் பதிலளிக்க முடியாது.
கவலை வேண்டாம்
தமிழகத்துக்கு ஆண்டுதோறும், 177 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடுவோம். இதைபற்றி அம்மாநிலத்தவருக்கு கவலை வேண்டாம். நாங்கள் எங்கள் மாநிலத்தில் பாயும் நதிகளை இணைக்கிறோமா, அணை கட்டுகிறோமா என்பதை பற்றி தமிழகம் சிந்திக்க தேவையில்லை.
மழை இல்லாத நெருக்கடியான நேரத்தில் தமிழகத்துக்கு, 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுங்கள், 2,500 கன அடி தண்ணீர் திறந்துவிடுங்கள் என, கேட்கின்றனர்.
நெருக்கடியான நேரத்தில், தண்ணீர் திறந்துவிடுவது கஷ்டம். சில நாட்களாக மழை பெய்வதால், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் ஓரளவு அதிகரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.