வங்கதேசத்தினர் ஊடுருவல் பிரச்னை: தொடர்கிறது என்.ஐ.ஏ., சோதனை
10 கார்த்திகை 2023 வெள்ளி 06:26 | பார்வைகள் : 2849
சென்னை புறநகர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், வங்கதேசத்தினரின் ஊடுருவல் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
சமூக விரோத கும்பல்கள், வெளிநாடுகளில் இருந்து ஆட்களை கடத்தி வந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தங்க வைத்துள்ளன. அவர்கள், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.
இதையடுத்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், தமிழகம் உட்பட, 10 மாநிலங்களில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்; 44 பேரை கைது செய்தனர்.
அதேநேரத்தில், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை தொடர்கிறது. தமிழகத்தில், சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், கருநீலம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தயாரிப்பு நிறுவனங்களில் நேற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
கைதான, 44 பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் வங்க தேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வாயிலாக, திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது போல தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கைதான நபர்களில், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் ஏஜென்ட்களும் உள்ளனர். சோதனை வாயிலாக மிகப்பெரிய தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள வங்கதேசத்தினரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.