தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தல்: சென்னையில் ஆணையம் ஆலோசனை
10 கார்த்திகை 2023 வெள்ளி 10:07 | பார்வைகள் : 2477
தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்துவது குறித்து, நேற்று ஆலோசிக்கப்பட்டது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் மண்டல மாநாடு, தேர்தல் கமிஷன் சார்பில், நேற்று சென்னையில் நடந்தது.
மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள் தர்மேந்திர ஷர்மா, நிதேஷ் வியாஸ், மனோஜ்குமார் சாஹு மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும், லோக்சபா தேர்தல் ஆயத்தப் பணிகள்; லோக்சபா தேர்தலை எத்தனை கட்டமாக நடத்துவது; பாதுகாப்பு பணிக்கு மத்திய ரிசர்வ் போலீசார் எவ்வளவு பேர் தேவை; பள்ளி, கல்லுாரி தேர்வு எப்போது நடக்க உள்ளது; ஓட்டுப்பதிவை எப்போது வைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த முறையை போல, ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் பட்டியல் எவ்வாறு தயார் செய்யப்பட்டுள்ளது என, ஆய்வு செய்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, லோக்சபா தேர்தலுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. அவற்றின் முதல் கட்ட பரிசோதனையை முடித்துள்ளோம்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு கண்காணிப்பு, நேரடி ஒளிபரப்பு, மத்திய பாதுகாப்பு படையினர் தேவை ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை பிரச்னை கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாதுகாப்பு வசதி குறித்து கேட்டனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும், சில அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.