மஹுவாவின் எம்.பி., பதவியை பறிக்க பரிந்துரை!: வெளியானது பார்லி., குழு அறிக்கை
10 கார்த்திகை 2023 வெள்ளி 14:11 | பார்வைகள் : 2583
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, எம்.பி.,யாக தொடரக்கூடாது. அவரது எம்.பி., பதவியை ரத்து செய்ய வேண்டும். தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக எழுந்த புகார் குறித்து, சட்டப்படி மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்' என, பார்லிமென்ட் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, 49, கிருஷ்ணா நகர் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார்.
இவர், பார்லி.,யில் பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.
இது குறித்து, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க, சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி கேட்க, திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ராவின் பார்லி., லாகின் ஐ.டி.,யை பயன்படுத்தியதாகவும், இதற்காக அவருக்கு பரிசுப் பொருட்களை கொடுத்ததாகவும் தொழிலதிபர் ஹிராநந்தானி ஒப்புக் கொண்டார்.
எதிர்ப்பு
ஆனால், இதை திட்டவட்டமாக மஹுவா மொய்த்ரா மறுத்தார். இது தொடர்பாக, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கும் அவர் ஆஜராகி இருந்தார்.
இந்நிலையில், மஹுவா மொய்த்ராவிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., வினோத் குமார் சோன்கர் தலைமையிலான, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு, 479 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்துள்ளது.
இந்த அறிக்கைக்கு ஆறு பேர் ஆதரவு தெரிவித்த நிலையில், நான்கு பேர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
குழுவில் இடம் பெற்றுள்ள, காங்., -- எம்.பி., பிரனீத் கவுர், அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதால், மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கை விபரம்:
திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் மிகவும் ஆட்சேபனைக்குரியவை; நெறிமுறையற்றவை. அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் பார்லி., லாகின் ஐ.டி.,யை பகிர்ந்தது, கடுமையான தண்டனைக்கு உட்பட்டது.
லோக்சபா எம்.பி.,யாக மஹுவா மொய்த்ரா தொடரக்கூடாது; அவரது எம்.பி., பதவியை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து, சட்டப்படி மத்திய அரசு விரிவாக விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் டிச., 4ல் துவங்கவுள்ள பார்லி., குளிர் கால கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும். பின், அதன் பரிந்துரையை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
இது குறித்து, லோக்சபா முன்னாள் செயலர் பி.டி.டி.ஆச்சாரி கூறியதாவது:
எம்.பி., ஒருவரின் பதவியை பறிக்க, லோக்சபா நெறிமுறைக் குழு பரிந்துரைப்பது இதுவே முதன்முறை. அடுத்த கட்டமாக, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்படும். அதை வெளியிட அவர் உத்தரவிடலாம்.
நடவடிக்கை
பார்லி.,யின் அடுத்த கூட்டத்தொடரில், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இந்த அறிக்கையை தாக்கல் செய்வார். அதன் மீது விவாதம் நடைபெற்று, எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறானது
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கூறியதாவது:மஹுவா மொய்த்ரா மீதான புகார்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அவரை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, ஒருதரப்பினர் வேண்டுமென்றே செயல்படுகின்றனர். குழுவின் பரிந்துரை தவறானது; பாரபட்சமானது. முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக அறிக்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜனநாயகத்தின் மரணம்!
பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை குறித்து, மஹுவா மொய்த்ரா நேற்று கூறியதாவது:எம்.பி., பதவியில் இருந்து என்னை தற்போது வெளியேற்றினாலும், அடுத்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் எம்.பி.,யாக வருவேன். இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. இதன் முடிவு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. நாட்டை பொறுத்தவரை, இது பார்லி., ஜனநாயகத்தின் மரணம். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. குளிர் கால கூட்டத்தொடரில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.