சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது?
11 கார்த்திகை 2023 சனி 10:54 | பார்வைகள் : 2707
ஒருவருக்கு சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது? அதற்கான காரணங்கள் என்ன? சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெளிவாக பார்ப்போம்.
சிறுநீரகத்தின் செயல்பாட்டை எப்படி இந்தக் கற்கள் பாதிக்கிறது? நமது உடலில் முக்கிய உறுப்பாக இருக்கும் சிறுநீரகம், ரத்தத்தை சுத்திகரித்து சிறுநீர்ப்பை மூலமாக கழிவுகளான சிறுநீரை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால், சிறுநீர்ப்பை அவ்வப்போது காலியாகி கொண்டேயிருக்கும். ஒருவேளை சிறுநீர்க கற்களால் பாதிக்கப்பட்டிருந்தால், சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஒட்டுமொத்த உடல்நலனே பாதிக்கப்படும். சிறு கற்கள் போன்று இருப்பவை சிறுநீரோடு வெளியேறும் போது கடுமையான வலி உண்டாகும். இந்த கற்கள் உப்பு படிகங்களாகும். நம் உடலில் உப்பு அளவுக்கு அதிகமாக சேரும் போதோ அல்லது அது கரையகூடிய தன்மை குறைவாகும் போதோ சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
பெரும்பாலான மக்கள் கடுமையான வெயில் காலத்திலும் கூட குறைவாகவே தண்ணீர் அருந்துகிறார்கள். சிறுநீரக கற்கள் வர இதுவும் ஒரு காரணம்.
அதிகப்படியான இறைச்சி உணவுகள் : அதிகப்படியான விலங்குகளின் கொழுப்பு உடலில் சேரும் போது யூரிக் ஆசிட் கற்கள் உருவாக காரணமாகிறது. அதிக உப்பு நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் குடல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஆக்ஸலேட் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
சிறுநீர் பாதை தொற்றுள்ளவர்கள் : சில பாக்டீரியா தொற்று காரணமாக அடிக்கடி சிலருக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. எனினும் அதே புவியியல் பகுதியில் இருந்தாலும், உணவுப் பழக்கத்தை கடைபிடித்தாலும் பலருக்கு சிறுநீரக கற்கள் உருவாவதில்லை. இது ஏனென்றால் மரபணு ரீதியாகவும் ஒரு சிலருக்கு சிறுநீரக கற்கள் வர அதிக வாய்ப்புள்ளது.
சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி? சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதில் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த உப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். தினமும் குறந்தப்பட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். சிறுநீரை எக்காரணம் கொண்டும் அடக்கி வைக்காதீர்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை : சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் நமது உடலில் சிட்ரேட் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இறைச்சி உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள். உங்கள் உடல் எடையை சரியாக பராமரியுங்கள். நன்றாக உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இவையெல்லாம் சிறுநீரக கற்கள் உருவாகமல் தடுப்பவை.