மர்ம பொதியால் கட்டுநாயக்கவில் இடைநிறுத்தப்பட்ட இந்திய விமானம்
11 கார்த்திகை 2023 சனி 05:19 | பார்வைகள் : 2684
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏஐ-272 ரக ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் இருந்து இரண்டு கிலோகிராம் தங்கம் அடங்கிய பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த விமான சேவை நேற்று மதியம் இடைநிறுத்தப்பட்டது.
குறித்த பொதி, வெடிகுண்டு என கருதியே விமான சேவை இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மதியம் 1.35 அளவில் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த போது கறுப்பு நிற பொதி ஒன்று கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பாதுகாப்புப் பணியாளர்கள் முன்னெடுத்த விமானத்தின் இறுதிச் சோதனையின் போது, அதன் பின்பக்க கழிவறையில் இருந்து உரிமை கோரப்படாத கறுப்பு நிற பொதி ஒன்றை மீட்டுள்ளனர். இதனையடுத்து விமானம் புறப்படாமல் விமான நிலையத்திற்கு திரும்பியது. பயணிகளை இறக்கிவிட்டு, அதிகாரிகள், விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு சென்றனர். இதன்போது அந்த பொதியை வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில், அது வெடிகுண்டு அல்ல என்பதை உறுதி செய்ததுடன் அதிலிருந்து தங்கத்தையும் மீட்டுள்ளனர்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு கிலோ கிராம் நிறையுடைய தங்கத்துடன் கூடிய பொதி விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை 4.43 அளவில் சென்னை நோக்கி புறப்பட்டது.