Paristamil Navigation Paristamil advert login

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 நீக்கம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370  நீக்கம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

11 மார்கழி 2023 திங்கள் 10:41 | பார்வைகள் : 2468


ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று (டிச.,11) சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், 2024 செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி, மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதேபோல், அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவு, நிரந்தர குடியுரிமை வழங்குவது தொடர்பாகவும், சில சிறப்பு உரிமைகள், சலுகைகள் அளிப்பதாகவும் இருந்தது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும், கடந்த ஆகஸ்ட் 5, 2019ல் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 

தீர்ப்பு

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று (டிச.,11) உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்புகள் அளித்தாலும், பெரும்பான்மையான நீதிபதிகள் அரசின் நடவடிக்கை ஆதரவாகவும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர். 

தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பு: மூன்று தீர்ப்புகள் இருந்தாலும், ஒரே தீர்ப்பாக தான் கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. ஜனாதிபதி ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்க முடியாது.

ஜனாதிபதி ஆட்சி

ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை. ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம். 

அவசரச் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது அரசியலமைப்பில் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை.இந்தியாவை உள்ளடக்கியது தான் காஷ்மீர். 


செப்டம்பருக்குள் தேர்தல்

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது; அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லும். அதன்படி, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும். அடுத்தாண்டு (2024) செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறோம். தேர்தலை நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்