ஒரு வீட்டுக்கு ரூ.10,000 முதல் 20,000 வரை செலவாகும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் குமுறல்
11 மார்கழி 2023 திங்கள் 10:47 | பார்வைகள் : 2308
மிக்ஜாம் புயல் மழையால், சென்னையின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தென் சென்னையில் வெள்ளம் வடிய, ஐந்து நாட்கள் வரை ஆனது. இன்னும் சில தெருக்களில் தேங்கி உள்ளது.
வீடுகளில் புகுந்ததால், கட்டில், ப்ரிஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததுடன், வெளியே நிறுத்திய பைக், கார் மற்றும் நீர் இறைக்கும் மோட்டார்கள் பழுதடைந்தன. மேலும், நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யாமல் பயன்படுத்த முடியாது.
சாதாரண வீடுகளில், புதிய நீர் இறைக்கும் மோட்டார் வாங்கி, தொட்டிகளை சுத்தம் செய்ய, 10,000 ரூபாய் வரை செலவாகும்.
பணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல, பைக், ஆட்டோ, இலகுரக சரக்கு வாகனங்கள், கார் பழுதை நீக்க, குறைந்தது 2,000 முதல 10,000 ரூபாய் வரை செலவாகும்.
தரைத்தள வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் வாங்க செலவு தனி.
இந்த வகையில், ஒவ்வொரு வீட்டுக்கும், 10,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். சாதாரண மக்களுக்கு இது பெரிய தொகை தான். பணிக்கு சென்று சகஜநிலைக்கு திரும்ப, செலவு செய்து தான் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
மாடிகளில் வசிப்போருக்கு வாகனங்கள் மட்டும் தான் சேதம். தரைத்தள குடியிருப்பாளர்களுக்கு வாகனத்துடன் வீட்டில் உள்ள பொருட்களும் சேதமடைந்துள்ளன.
அரசு தரும், 6,000 ரூபாய் நிவாரணம் எங்கள் பாதிப்பை ஈடு செய்யாது. வாகனம் பழுது நீக்குவோர், உதிரிபாகம் விற்போர் லாபத்தை குறைத்து உதவலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரு மாத வாடகை குறையுமா?
பல இடங்களில், தரைத்தள வீடு, கடைகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. வாடகையில் வசிப்போர், கடை நடத்துவோர் பழைய நிலைக்கு திரும்ப, நாட்கள் பல ஆகும். இதனால், கட்டட உரிமையாளர்கள், டிச., மாத வாடகையை வாங்காமல் உதவ முன்வர வேண்டும் என, வாடகைதாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.