செங்கடலில் எந்த ஒரு மோதலையும் தவிர்க்கும் படி அழைக்கும் பரிஸ்!!
11 மார்கழி 2023 திங்கள் 15:51 | பார்வைகள் : 4146
செங்கடலில் பிரெஞ்சு போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதன் பின்னர், ‘செங்கடலில் எந்த ஒரு மோதலையும் தவிர்க்கும் படி’ பரிஸ் கோரியுள்ளது.
காஸா பகுதியில் யுத்தப்பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உதவிசெய்யும் நோக்கில், பிரெஞ்சு கப்பல் ஒன்று யேமன் நாட்டின் வடக்கு கடற்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளது. யேமனில் இருந்து 110 கி.மீ தொலைவில் இந்த கப்பல் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு குறித்த கப்பலை இலக்கு வைத்து அனுப்பப்பட்ட ஆளில்லா ட்ரோன் விமானங்கள் இரண்டை பிரெஞ்சு இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் (Houthi ) என தங்களை அடையாளப்படுத்தும் அமைப்பினரே மேற்படி தாக்குதலை முயன்றுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘செங்கடலில் எந்த ஒரு பிராந்திய மோதலையும் தவிர்க்கும் படி’ அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை, எந்த ஒரு சுதந்திரமான செயற்பாட்டின் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் நாம் கண்டிக்கிறோம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.