நிராகரிக்கப்பட்ட சட்ட திருத்தம்! - மக்ரோனின் அரசாங்கத்துக்கான மிகப்பெரிய தோல்வி!
12 மார்கழி 2023 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 4312
குடியேற்றவாதிகளுக்கான சட்ட திருத்தம் ஒன்றை உள்துறை அமைச்சர் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் வாசித்தார். இந்த திருத்தத்துக்கு எதிராக பெருமளவான வாக்குகள் அளிக்கப்பட்டு அது தோல்வியில் முடிந்துள்ளது.
அரசு நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் குடியேற்றவாதிகளுக்கான புதிய சட்ட திருத்தம் (loi immigration) ஒன்றை அறிவித்தது. உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் முன்பாக வாசித்தார். அவர் திருத்தத்தை வாசிக்கும் போதே அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் motion de rejet முறை மூலம் இந்த திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 270 வாக்குகள் சட்டத்திருத்தத்துக்கு எதிராக பதிவானது. இதனால் இந்த குடியேற்றவாதிகளுக்கான சட்டத்திருத்தம் நிராகரிக்கப்பட்டது. மக்ரோனின் அரசாங்கம் சந்தித்த மிகப்பெரிய தோல்வி இது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குடியேற்றவாதிகளுக்கான சட்டத்திருத்தமானது, ‘பிரான்சில் வசிக்கும் ஆவணமற்ற அகதிகளுக்கான குடியேற்றத்தை விரைவு படுத்துவது. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது மற்றும் ஆபத்தான வெளிநாட்டவர் என கருதப்படுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது’ போன்ற செயல்களை இது அனுமதிக்கிறது.
இந்த சட்டத்திருத்தத்துக்கு இடதுசாரிகள் இணைந்த Nupes கட்சியினர், Rassemblement national கட்சியினரும், சோசலிச கட்சியினரும் என மொத்தமாக 270 வாக்குகளை அளித்தனர். 265 வாக்குகள் இருந்தாலே திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனும் நிலையில், 270 வாக்குகள் பதிவானமை மக்ரோனின் அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வி என விமர்சிக்கப்பட்டுள்ளது.