WPL 2024 -ல் இடம் பெற்றுள்ள தமிழக வீராங்கனை....
12 மார்கழி 2023 செவ்வாய் 07:44 | பார்வைகள் : 1673
பெண்களுக்கான 2 -வது மகளிர் பிரீமியர் லீக் (WPL 2024) கிரிக்கெட் தொடரில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணன் இடம் பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 2 -வது அல்லது 3 -வது வாரத்தில் பெண்களுக்கான 2 -வது மகளிர் பிரீமியர் லீக் (WPL ) கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டும் ஒரே மாநிலத்திலேயே நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (BCCI) செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "கர்நாடகா அல்லது உத்தரபிரதேச மாநிலத்தில் நடத்தப்படலாம்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் WPL தொடருக்கான மினி ஏலம் கடந்த 9 -ம் திகதி மும்பையில் நடைபெற்றது. இதில் சர்வதேச போட்டியில் ஆடாத வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனையான காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது. இவர் பஞ்சாபை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
WPL தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனையான கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.10 லட்சத்துக்கு வாங்கியது. இவர், தமிழ்நாட்டிலிருந்து மகளிர் பிரீமியர் லீக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவர், தமிழக வீரர் அபினவ் முகுந்தின் தந்தை டி.எஸ்.முகுந்தின் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார். லெக் ஸ்பின்னராக அறியப்படும் இவர் லோயர் மிடில் ஆர்டரில் ரன்களை எடுத்து பேட்டிங்கிலும் உதவி செய்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ஆல்ரவுண்டராக இருக்கும் கீர்த்தனா தமிழ்நாடு பெண்கள், இந்திய பசுமை பெண்கள், தென் மண்டல பெண்கள் மற்றும் ஆரஞ்சு டிராகன்ஸ் பெண்கள் ஆகிய 4 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இவரது தந்தை தந்தை சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.