Sanitary Napkins -களை நன்கொடையாக பெறும் கோயில்....
12 மார்கழி 2023 செவ்வாய் 08:23 | பார்வைகள் : 1799
உலகில் முதன்முறையாக பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை நன்கொடையாக பெறும் கோயில் ஒன்று உள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு வகையான கோயில்கள் மற்றும் கடவுள்கள் உள்ளது. அங்கு கடவுளுக்கு காணிக்கையாக பணத்தையோ அல்லது வேறு எதாவது ஒரு பொருளையோ பக்தர்கள் வழங்குவர்.
ஆனால், மத்திய பிரதேச மாநிலம், போபால் தலைநகரில் உள்ள அரேரா காலனியில் இருக்கும் கோயிலில் மட்டும் சானிட்டரி நாப்கின்களை நன்கொடையாக வழங்குகின்றனர்.
சில கோயில்களில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருந்தால் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது. ஆனால், இந்த அன்னபூர்ணா தேவி கோயில் பெண்களின் உரிமைக்காக பாடுபடுவதாக கூறப்படுகிறது. கோயிலில் நன்கொடையாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுவது உலகில் முதல்முறையாகும்.
கோயிலில் வழங்கப்படும் அனைத்து சானிட்டரி பேட்கள் மற்றும் மாதவிடாய் கப்களும் குடிசைப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அரசுப் பள்ளிகளில் விநியோகிக்கப்படுவதாக ஹெய்செல் அறக்கட்டளையின் (NGO) இயக்குநர் திபஞ்சன் முகர்ஜி கூறியுள்ளார்.
அசாமின் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலில் நடைபெறும் அம்புபாச்சி திருவிழாவில் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நடைமுறைகளில் பணியாற்றுவதாக அறியப்படுகிறது. இதன் மூலம் தான் சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கும் யோசனை வந்துள்ளது.
கடவுள்களுக்கு வழங்கப்படும் பூ மாலைகள் மறுநாளே தூக்கி வீசப்படுவதால் யாருக்கும் பயனில்லை. இதனால், பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று இதனை பின்பற்றுகின்றனர். இதுவரை மொத்தம் அன்னபூர்ணா தேவி கோயிலுக்கு 11,000 -க்கும் மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை மக்கள் வழங்கியுள்ளனர்.