இலங்கையில் எரிவாயு விலை மீண்டும் பாரியளவில் உயரும் அபாயம்
12 மார்கழி 2023 செவ்வாய் 10:24 | பார்வைகள் : 3355
வற் வரி அதிகரிப்பால் எரிவாயு விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
வற் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக உயர்த்தும் வரி திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் இடம்பெறும் எரிவாயு விலை திருத்தத்தில் விலை உயர்வு ஏற்படும் எனவும் அரச தரப்பு செய்திகள் கூறுகின்றன.
எரிவாயுவுக்கு இதுவரை வற் வரி விதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், நேற்று முதல் எரிவாயு மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எரிவாயு விலைகள் அதிகபட்சமாக 18 வீதம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 04ஆம் திகதி அதிகரிக்கப்பட்டிருந்த பின்புலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் சூழ்நிலை தோன்றியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற விலை திருத்தத்தில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன் புதிய விலை 3,565 ரூபாவாக காணப்படுகின்றது.
05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன் புதிய விலை 1,431 ரூபாவாக உள்ளது.
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 668 ரூபாவாக காணப்படுகின்றது.