குடியேற்ற சட்டச் சீர்திருத்தத்தை கைவிடும் நிலையில் மக்ரோன் அரசு!!
13 மார்கழி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 3773
குடியேற்றவாதிகளுக்கான சட்டச் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் தோல்வியில் முடிந்ததை அடுத்து மக்ரோனின் அரசாங்கம் அதனைக் கைவிடும் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன், உள்துறை அமைச்சர் Gérald Darmanin, அரசியல் மற்றும் சட்ட ஆலோசகர்கள் பங்கேற்ற குறித்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டன.
“பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை 49.3 ஐ பயன்படுத்தி நிறைவேற்ற விரும்பவில்லை” என மக்ரோன் தெரிவித்ததாக அறிய முடிகிறது. தவிர, ‘கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட நாட்களின் போது இந்த சர்ச்சைகள் பரவுவதை விரும்பவில்லை’ எனவும் அறிய முடிகிறது.
இதனால் குறித்த சட்டத்திருத்தத்தினைக் கைவிடும் நிலையில் மக்ரோனின் அரசாங்கம் இருப்பதாக அறிய முடிகிறது.
கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் Gérald Darmanin இனால் வாசிக்கப்பட்ட குடியேற்றவாதிகளுக்கான சட்டச் சீர்திருத்தம் தோல்வியில் முடிந்தது. எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த சீர்திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து தோல்வியடையச் செய்திருந்தனர்.