இலங்கைக்கான 2ம் தவணை கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி!
13 மார்கழி 2023 புதன் 08:11 | பார்வைகள் : 2229
இலங்கைக்கான 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதலாவது மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது
இதனையடுத்து இலங்கைக்கு இரண்டாம் தவணை கடனாக சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த கடனுதவி சுமார் 670 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்தது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு உடனடியாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டன.
இதன் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்குழு 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான முதலாவது மதிப்பாய்வில் இலங்கை அதிகாரிகளுடன் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டியது.
இதற்கான ஒப்புதலையே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு வழங்கியுள்ளது.
இலங்கை தொடர்பான செயற்குழு விவாதத்தைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்கள் பலனைத் தரத் தொடங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான பணவீக்கம், குறிப்பிடத்தக்க வருவாய் அடிப்படையிலான நிதிச் சரிசெய்தல் மற்றும் இருப்புக்களை உருவாக்குதல் ஆகியவற்றுடன் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுகின்றன எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடன் வசதி திட்டத்தின் கீழ் செயல்திறன் திருப்திகரமாக உள்ளது.
ஜூன் இறுதிக்கான அனைத்து செயல்திறன் அளவுகோல்களும் இலங்கையினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
செலவு நிலுவைகள் மற்றும் வரி வருவாய் மீதான இலக்கைத் தவிர, அனைத்து குறிகாட்டி இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன.
பெரும்பாலான கட்டமைப்பு அளவுகோல்கள் கடந்த ஒக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டன அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டன.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கி ஆகியவற்றுடன் கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பான இலங்கையின் உடன்படிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன.
இந்தநிலையில் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சரியான நேரத்தில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் ஒரு தீர்வை எட்டுவது, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை நடுத்தர காலத்திற்கு மீட்டெடுக்க உதவும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.