காசாவில் மருத்துவமனைகளை முற்றாக முடக்கிய இஸ்ரேல்...!
13 மார்கழி 2023 புதன் 08:24 | பார்வைகள் : 3229
காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேல் தாக்குதலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
11 மருத்துவமனைகளும் ஓரளவு மட்டுமே செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காசா மீது கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ஹமாசை ஒழிக்கும் வரையில் எத்தனை மாதங்கள் ஆனாலும் போரை தொடருவோம் என சூளுரைத்துள்ளது.
போரின் இலக்கை விரைவில் எட்டும் நோக்கில் இஸ்ரேல் படைகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும்,
காசாவில் அனைத்து வழியிலான தாக்குதல்களையும் விரிவுப்படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 11 மருத்துவமனைகளும் ஓரளவு மட்டுமே செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காசாவிலிருந்தபடி உலக சுகாதார அமைப்பின் ரிச்சர்ட் பீப்பர்கார்ன் கூறுகையில்,
“காசாவிலுள்ள 3-இல் ஒரு பகுதிக்கும் குறைவான மருத்துவமனைகள்தான் ஓரளவுக்கு இயங்கி வருகின்றன.
வெறும் 66 நாட்களில் காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்க்குலைக்கப்பட்டுவிட்டது.
36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் செயல்படமுடியாமல் முடங்கியுள்ளன.
வடக்கு காசாவில் ஒன்று, தெற்கு காசாவில் 10 என மொத்தம் 11 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.
அவையும் முழுமையாக இயங்கவில்லை.
காசாவில் நடத்தப்படும் தாக்குதலால் மருத்துவமனைகளும், பிற சுகாதாரக் கட்டமைப்புகளும் இதற்கு மேலும் நிலைகுலைந்தால் அது தாங்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்தகைய கொடுமையான நிலை ஏற்படக்கூடாது என்று வேண்டுகிறோம்” என அவர் தெரிவித்தார்.