பிரித்தானியாவில் பரவும் பழங்கால நோய்த்தொற்று! மருத்துவர்கள் எச்சரிக்கை
13 மார்கழி 2023 புதன் 12:43 | பார்வைகள் : 3120
பெண் நோய் என அழைக்கப்படும் சிபிலிஸ், சமுதாயத்தின் கீழ் நிலையில் வாழ்பவர்களை தாக்கும் நோய் என கருதப்படும் காசநோய் போன்ற நோய்களுடன், தற்போது, டிப்தீரியா என்னும் பழங்கால நோய்த்தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள Luton என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவருக்கு இந்த டிப்தீரியா என்னும் பழங்கால நோய் தொற்றியுள்ளது
உலக நாடுகளில் பெரும்பாலானவற்றில் தற்போது இந்த டிப்தீரியா முதலான நோய்களைத் தவிர்க்கும் வகையில், குழந்தைகளுக்கு DPT (diphtheria, pertussis, and tetanus)என்னும் முத்தடுப்பு ஊசி வழங்கப்பட்டுவருகிறது.
ஆகவே, பெரும்பாலான குழந்தைகள் இந்த நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாகவே இருப்பார்கள்.
அந்த மாணவருக்கு எப்படி அந்த நோய் வந்தது என்பது குறித்து ஆராய்ந்துவரும் அறிவியலாளர்கள், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்த மாணவருக்கு டிப்தீரியா தொற்று கண்டுபிடிக்கபட்டது குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ள அதிகாரிகள், யாருக்காவது இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
யாராவது முறையாக முழுமையான தடுப்பூசி பெறவில்லையானால், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும், இந்த நோய் பரவலைத் தடுக்க அதுவே சரியான நடவடிக்கை என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
பயங்கரமாக பரவக்கூடிய தொற்றுநோயான டிப்தீரியா, ஒரு காலத்தில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்த ஒரு நோயாகும்.
ஆனால், 1940களிலிருந்து அதற்கெதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதால், தற்போது அது அபூர்வமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.