உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் ரோபோ..
14 மார்கழி 2023 வியாழன் 08:28 | பார்வைகள் : 1800
தமிழகத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோபோ ஒன்று உணவு பரிமாறுகிறது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில நாட்களாக ரோபா ஒன்று உணவு பரிமாறி வருகிறது.
வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு ரோபோவுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதனால், பலருக்கும் பிடித்த இடமாக இந்த உணவகம் மாறி வருகிறது.
இதுகுறித்து தனியார் உணவகத்தினர் கூறுகையில், "கடந்த சில நாள்களாக எங்கள் உணவகத்தில் சர்வரின் பணியை ரோபோ செய்து வருகிறது . சமைத்த உணவை சமையல் கூடத்தின் முன்பு நிற்கும் ரோபாவில் வைத்துவிட்டு எந்த டேபிளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அசைன் செய்தாலே போதும். பின்னர், அந்த டேபிளுக்கு கொண்டு சென்று நிற்கும்.
அங்கு, வாடிக்கையாளர்கள் அதனை எடுத்து சாப்பிடுவார்கள். பின்பு, வாடிக்கையாளர்கள் க்ளோஸ் செய்தால் அடுத்த டேபிளுக்கு ரோபோ நகர்ந்துவிடும். இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
இந்த ரோபோவில் 5 அடுக்குகள் உள்ளன. அதில் உணவை வைத்துவிட்டால், டேபிளுக்கு கொண்டு செல்லும். ரோபோவின் பேட்டரி 8 மணிநேரம் செயல்படும்.
சீனாவில் இருந்து இந்த ரோபோவை ரூ.8.50 லட்சத்திற்கு இறக்குமதி செய்துள்ளோம். பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் வகையிலும் ரோபோ அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.