Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சுப் புரட்சி தாக்கத்தில் உருவான சுதந்திர தேவி சிலை

பிரெஞ்சுப் புரட்சி தாக்கத்தில் உருவான சுதந்திர தேவி சிலை

14 மார்கழி 2023 வியாழன் 10:05 | பார்வைகள் : 1524


உலக வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைத்த பிரெஞ்சுப் புரட்சி என்றால் என்ன? அது ஏன் உண்டானது? அதன் விளைவுகள் என்னென்ன? பிரெஞ்சுப் புரட்சி மக்களுக்கு சொல்லும் பாடம் என்ன?

பசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த மக்களால் பெரும் புரட்சி ஏற்பட்டது. பல ஆண்டுகளாக போர் ஒன்றே முக்கிய தொழிலாகி, விவசாயம் கூட முடங்கிப் போனதால் அடிப்படை உணவான ரொட்டியின் விலையும் உச்சத்திற்குச் சென்ற அதே வேளையில் அரச குடும்பத்தின் ஆடம்பர செலவுகளும், அரண்மனை விருந்துகளும் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

தொடர்ந்த போர்களின் விளைவால் அந்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சு தேவையில்லாமல் ஈடுபட்டதால், பெரும் பொருள் செலவாகியிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வட அமெரிக்காவிலிருந்த பிரான்ஸ் காலனிகளின் கட்டுப்பாட்டை இழந்தது அதன்பின் பிரிட்டன் ஆதிக்கமும் பெருகியது.

இதனால் பிரெஞ்சு மன்னர்கள் மீது கடும் கோபம் கொண்டார்கள் பிரெஞ்சு குடிமக்கள். கடன் சுமையால் நாட்டில் நிலவிய மோசமான சூழல் அதனால் கடுமையான வரி வசூல் போன்றவை மக்களை பொங்கி எழச்செய்தது. பசிக்கொடுமையால் மக்கள் துடித்துக்கொண்டிருக்க "உண்ண ரொட்டி இல்லாவிட்டால் என்ன., கேக் இருக்கிறதே" என்று எள்ளி நகையாடிய ஆட்சியாளர்களின் ஆணவத்தினால் புரட்சி வெடித்துச் சிதறியது. 11 ஆண்டுகள் தொடர்ந்து போராடி சாமான்ய மக்கள் நிலப்பிரபுத்துவத்திற்கு ஒரு முடிவை உண்டாக்கிய புரட்சி இது என வரலாறு குறிப்பிடுகிறது.

பிரஞ்சுப் புரட்சிக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் மன்னராட்சிக்கு எதிரான புரட்சியாளர்களின் கிளர்ச்சி நிகழ்ந்திருந்தது. பிரெஞ்சு புரட்சிக்கு சற்றுமுன்னரே அமெரிக்கப் புரட்சி நடைபெற்று உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே பிரெஞ்சு புரட்சியும் உண்டானது.

பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், ஐரோப்பாவில் மிக அதிகமாக இருந்தது. அதிகார வர்கத்தை கூண்டோடு ஒழித்த புரட்சி இது. நிலபிரபுத்துவ, அதிகார முறைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த அதிகார கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு குடியுரிமை, மக்கள் உரிமைகள் போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும், இம்மாற்றங்களுக்கு காரணமாக இருந்தனர்.

1815-ல் பிரெஞ்சுப் புரட்சியினால் குடிமக்களுக்குக் கிடைத்திருந்த உரிமைகளும் பல்வேறு சலுகைகளும் பிரெஞ்சுப் பேரரசு வீழ்ந்ததனால் பறிக்கப்பட்டபோதிலும் குடிமக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதையும், புரட்சி செய்வதையும் மறக்கவில்லை. இதன் விளைவு, இம்மக்களின் சுய அடையாளத்தில், அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன என்கின்றனர் வரலாற்றாளர்கள். சமூகத்தில் சமத்துவம், மனித உரிமைகள் போன்ற சுதந்திரக் கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கின.

இறுதியில் தோல்வியடைந்தாலும் முதலில் ஐரோப்பாவிலும் பின்பு உலகெங்கும் மக்களாட்சிக் கருத்துகள் பரவ இந்த புரட்சியே வித்திட்டது என்றால் அது மிகையாகாது. சீனாவில் நடைபெற்ற மாசேதுங்கின் புரட்சியிலும் இந்த பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் இருந்தது.

1804 முதல் 1815 வரையிலான மாவீரன் நெப்போலியன் போனபார்ட் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் பிரான்சு புகழின் உச்சத்தில் இருந்தது. அதாவது பிரெஞ்சு புரட்சியால் உருவான குழப்பத்தில் தான் மாவீரர் நெப்போலியன் பிரான்சு நாட்டின் அதிபர் ஆனார் என்கின்றனர்.

ரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல நூற்றாண்டுகளாக பிரான்சில் நீடித்திருந்த மன்னராட்சி முறை முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. மாபெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. வழக்கிலிருந்த நூற்றாண்டுக்கால அதிகாரக் கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டு குடியுரிமை, நிரந்தர உரிமைகள் போன்றவை பரவின.

இதே பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கம் நமது புதுச்சேரியிலும் இருந்தது வேதனைக்குரிய விசயமாக இருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் இன்றும் நமக்கு வாழ்க்கையை எளிதாக எதிர்கொள்ள வழியமைப்பதை மறுக்க முடியவில்லை. அவர்களுடைய நகர கட்டமைப்புகள் இன்றளவிலும் மிகச்சிறப்பாக இருந்து கொண்டுள்ளன. இன்றும் பிரெஞ்சு நாட்டு ஓய்வூதியம் பெறும் முதியோர் இருந்துகொண்டுதான் உள்ளார்கள்.

பிரெஞ்சுக்காரர்கள் சுதந்திரத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற பற்றின் காரணமாக அவர்கள் வணங்கக்கூடிய சுதந்திர தேவியின் உருவத்திலேயே பிரம்மாண்ட சிலையைப் படைத்து அதனை அமெரிக்க மக்களுக்குப் பரிசாக அளித்துள்ளனர். சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!

சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. சுதந்திரதேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் வருடத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.

ரோம் நகரப் பெண்களின் பாரம்பரிய உடையான இசுடோலோ என்பதை அணிந்துள்ள நிலையில் காணப்படும் சுதந்திர தேவி சிலை 1902-ம் ஆண்டு வரை கலங்கரை விளக்காகவும் இருந்துள்ளது. இச்சிலையின் உட்புறத்தில் 354 ஒற்றை வளைவு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தை அடைந்து அதன் மீது ஏறி நின்று ரசிக்க முடியும். 25 சாளரங்கள் கொண்ட இந்த அறையிலிருந்து நியூயார்க் நகரைப் பார்வையிடலாம். சிலையின் உச்சியில் அதன் பீடத்தில் எம்மா லாசரசின் கவிதையான, புதிய கொலாசசு செதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டு, 1886-ல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.

1865-ல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.

1886-ல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்ட மாக்கப்போ கிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.

ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800-களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி சுதந்திர தேவியின் திருவுருவம், 'புலம் பெயர்ந்தோரின் தாய்' என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.

முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்றம் சரிவடைந்ததால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், ராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகளை வெறித்துப் பார்க்கும் பொழுதெல்லாம் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது.

பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடு களுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளில் இருந்து மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.

வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில் சூலை 4,1776 என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியிடம் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்க ளையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்தில் இருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டு உள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:

"அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையா ளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்து உள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்".

இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டு களிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிச யங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தைப் பார்ப்பது நியூயார்க் நகரத்திற்கான பயணத்தின் மிக சிறப்பான அனுபவங்களில் ஒன்று. 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கு செல்ல அனுமதி இல்லை. மிகவும் பிரபலமாக உள்ள கிரீடத்திற்கான நுழைவுச் சீட்டுகள் முன்பதிவு மூலம் மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவில் மட்டுமே கிடைக்கின்றன, தீவுக்கு நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பே கிரீடத்திற்கான நுழைவுச் சீட்டுகள் வாங்கப்பட வேண்டும்.

நன்றி மாலைமலர்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்